IPL 2025 CSK vs RR: காட்டடி அடித்த ராணா! கடைசியில் கட்டுப்பட்ட ராஜஸ்தான்! கம்பேக் தருமா சென்னை?
IPL 2025 CSK vs RR: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நிதிஷ் ராணாவின் அதிரடியான பேட்டிங்கால் சென்னை அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் கவுகாத்தியில் உள்ள பார்ஸபரா கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மிரட்டிய ராணா:
இதையடுத்து, பேட்டிங்கைத் தொடங்கிய ராஜஸ்தான் அணிக்கு கலீல் அகமது அதிர்ச்சி தந்தார். அவரது பந்தில் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு சாம்சன் - நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தனர். சாம்சன் அதிரடி காட்டும் முன்னரே 16 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்த நிலஙையில் அவுட்டானார். இதையடுத்து, ராணா - பராக் ஜோடி சேர்ந்தனர்.
நிதிஷ் ராணா களமிறங்கியது முதலே அதிரடி காட்டினார். அஸ்வின், பதிரானா, ஓவர்டன், கலீல் அகமது என யார் வீசினாலும் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். இதனால், ராஜஸ்தான் ரன்ரேட் 10க்கும் மேலேயே இருந்தது. அஸ்வின் ஓவரில் அடித்து ஆடிய ராணா அவரது சுழலிலே அவுட்டானர். அரைசதம் கடந்து சதம் நோக்கி சென்ற ராணா, அஸ்வின் சுழலில் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ராணா 36 பந்துகளில் 10 பவுண்டரி 5 சிக்ஸருடன் 81 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசியில் கட்டுப்பட்ட ராஜஸ்தான்:
அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய துருவ் ஜோரல் 3 ரன்னிலும், ஹசரங்கா 4 ரன்னிலும் அவுட்டானார்கள். பின்னர், ராஜஸ்தான் அணிக்காக மறுமுனையில் ஆடிக் கொண்டிருந்த ரியான் பராக்கும் அவுட்டானார். அவர் 28 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 ரன்களில் அவுட்டானார். இதன்பின்னர், ராஜஸ்தான் அணியின் ரன்விகிதம் குறைந்தது.
இதனால், 200 ரன்களை கடக்க வேண்டிய ராஜஸ்தான் அணி 200 ரன்களுக்குள் மட்டுமே சென்னையால் கட்டுப்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. பதிரானா, நூர் அகமது, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சென்னை அணியில் அஸ்வின் ரன்களை வாரி வழங்கினார். அவர் 4 ஓவர்களில் 46 ரன்களை வாரி வழங்கினார்.
புதிய வீரர்களுடன் களமிறங்கியுள்ள சென்னை இந்த போட்டியில் வெற்றி பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.