TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
Vijay Speech Parandur: பரந்தூர் விமான நிலையத்தில் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் உள்ளதாக தெரிகிறது என, தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

Vijay Speech Parandur: எனது கள அரசியல் பயணத்திற்கு பரந்தூர் தான் சரியான இடம் என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
பரந்தூரில் விஜய் பேச்சு:
தொடர்ந்து, “பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிக்காக எடுக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். விவசாய இடங்கள் பாதிக்கப்படாத வண்ணம், புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு நானும், தமிழக வெற்றிக் கழகத்தினரும் தொடர்ந்து ஆதரவாக இருப்போம். வளர்ச்சி பணிகளுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், விவசாயிகள் பாதிக்கும் வகையிலான வளர்ச்சி திட்டங்கள் வேண்டாம். பாதிப்புகள் குறைவாக இருக்கும் இடத்தில் விமான நிலையத்தை அமைக்கலாம். சட்டத்திற்குட்பட்டு பரந்தூர் மக்களுடன் உறுதுணையாக நிற்பேன்.
டங்ஸ்டன் விவகாரம்:
சமீபத்தில் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதனை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்னையிலும் எடுத்து இருக்க வேண்டும். எப்படி அரிட்டாப்பட்டி மக்கள் நம்முடைய மக்களோ, அதே மாதிரி பரந்தூர் மக்களும் நம்முடைய மக்கள் தானே. அப்படித்தானே ஒரு அரசாங்கள் யோசித்திருக்க வேண்டும்.
யாருக்கு லாபம்?
ஆனால், அரசு அப்படி செய்யவில்லையே. ஏனென்றால் இந்த விமான நிலையத்தையும் தாண்டி, இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அதை நம்முடைய மக்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது 8 வழிச்சாலை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை திமுக எதிர்த்தது ஏன்? எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவு? ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நாடகங்களை பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். உங்களுடைய வசதிக்காக அவர்களோடு இருப்பது, இல்லாமல் இருப்பதும், நாடகம் ஆடுவதையும், ஆடமலிருப்பதையும், அதுசரி நம்பும்படியாக நாடகமாடுவதில் தான் நீங்கள் கில்லாடியாச்சே. ஆனாலும் இனியும் மக்கள் உங்கள் நாடகத்தை பார்த்துவிட்டு சும்மா இருக்கமாட்டார்கள்.
வளர்ச்சி என்ற பெயரில் ஏற்படும் அழிவுகள் மக்களை ரொம்பவே பாதிக்கும். பரந்தூர் மக்கள் கிராம தேவதைகளான கொல்லமேட்டாள் அம்மன் மேலும், எல்லை அம்மன் மேலும் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரிய வந்தது. அந்த நம்பிக்கையை இழக்க வேண்டாம். உங்களுக்காகவும், உங்கள் ஊருக்காகவும் இனி உங்கள் வீட்டு பிள்ளையாக நானும், தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களும் சட்டத்திற்குட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களுக்கு துணையாக இருப்போம்.
ஏகனாபுரம் மக்களை ஊருக்குள் வந்து மக்களை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. நான் ஏன் ஊருக்குள் வரக்கூடாது என எனக்கு தெரியவில்லை. ஊருக்குள் வந்து மக்களை சந்திக்க மீண்டும் வருவேன். உறுதியாக இருங்கள் நல்லதே நடக்கும்” என விஜய் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

