TVK Vijay: விஜய் எடுத்த முடிவு.. சோகத்தில் அதிமுக.. ஹாப்பியில் திமுக - காரணம் இதுதான்
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் 3வது அணி உருவாக இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு கூட்டத்தில் அனல் பறக்க பேசினார்.
3வது அணியை அறிவித்த விஜய்:
தவெக-வின் முதல் மாநாட்டிலே கூட்டணிக்கு மற்ற கட்சியினருக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்த விஜய், திமுக அரசியல் எதிரி என்றும், பா.ஜ.க. கொள்கை எதிரி என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று செயற்குழு கூட்டத்தில் வெளிப்படையாக திமுக மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்றுமே இல்லை என்று விஜய் அறிவித்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதனால், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக நடிகர் விஜய் தலைமையில் 3வது அணி உருவாக இருப்பது உறுதியாகியுள்ளது.
கூட்டணி:
விஜய்யின் இந்த அறிவிப்பால் அதிமுக - பா.ஜ.க. கூட்டணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி என்று பட்டியல் நீளமாக உள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பாமக ஆகிய கட்சிகளே பெரிய கட்சிகள். தேமுதிக-வுடன் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டில் பெரியளவு வாக்கு சதவீதம் இல்லாவிட்டாலும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி என்ற செல்வாக்கு உள்ளது. பாமக-விற்கு வட தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு சதவீதமும், செல்வாக்கும் இருந்தாலும் ராமதாஸ் - அன்புமணி பிரச்சினையால் பாமக பிளவுபட்டு கிடக்கிறது.
பாஜகதான் காரணம்:
இந்த சூழலில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கட்சியும், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவருமான நடிகர் விஜய் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணி விரும்பியது. இதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். பாஜக எப்போது அதிமுக கூட்டணிக்குள் வந்ததோ, அப்போதே விஜய் கூட்டணிக்குள் வரமாட்டார் என்பது உறுதியானது. இப்போது, அதிகாரப்பூர்வமாக இன்று விஜய் அதை அறிவித்துள்ளார்.
சோகத்தில் அதிமுக:

விஜய்யின் இந்த அறிவிப்பால் அதிமுக கூட்டணியினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே அனைவரின் கணிப்பாக உள்ளது.
குறிப்பாக, முதல் தலைமுறையினரின் வாக்குகளை விஜய் அள்ளுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று அதிமுக தரப்பு விரும்பியதாகவே கூறப்படுகிறது. இந்த சூழலில், பா.ஜ.க. இருப்பதால் விஜய் அதிமுக கூட்டணிக்கு மறுப்பு சொல்லியுள்ளார்.
வாக்குகள் பிரிவது உறுதி:
விஜய்யின் இந்த முடிவால் திமுக-வினர் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கிய அதிமுக-வும், தவெக-வும் தனித்தனியாக களமிறங்குவதால், திமுக-விற்கு எதிரான வாக்குகள் பிரியும் என்பதே அவர்களின் மகிழ்ச்சிக்கான காரணமாக உள்ளது. இது அவர்களுக்கு சாதகமாகவே தேர்தலில் அமையும் என்பது அவர்களின் கணிப்பு ஆகும்.
முதல் தலைமுறை வாக்குகள், தொடர்ந்து ஒரே கட்சிக்கு வாக்களித்து வருபவர்கள் என பல விதமான வாக்காளர்களை அரசியல் கட்சியினர் எப்படி தங்கள் பக்கம் கவர்ந்திழுக்கப்போகிறார்கள்? என்பதே மிகப்பெரிய கேள்வியாக அவர்கள் முன் எழுந்துள்ளது.





















