திருவண்ணாமலை : வேட்டவலத்தில் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டெடுப்பு
வேட்டவலத்தில் செங்காவி நிறத்தில் வரையப்பட்டுள்ள 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி குன்று மலைகளின் தொடர்ச்சியாக உள்ள திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே பாப்பாத்திக் கொட்டாய் கிராமத்தில் பெரிய பாறை ஒன்று உள்ளது. இங்கு மாவட்ட வரலாற்று நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன், பேராசிரியர் எ.சுதாகர் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தபோது, அரிய வகை செங்காவி நிறத்தில் ஓவியங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த பெரிய பாறையின் கீழ் புடவு போன்ற பகுதியில் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது, அழியாமல் இருந்துள்ளது. மொத்தம் அந்த பாறையில் 5 மான்கள் வரையப்பட்டுள்ளன. இதில் கொம்புகளுடன் விடைத்து நிற்கும் பெரிய மான் ஒன்றும், அதன் எதிர்புறம் கன்றாக இருக்கும் சிறிய மான் ஒன்றும் தெளிவாக பார்வைக்கு புலப்படுகின்றது.
இந்த ஓவியங்கள் செங்காவி நிறத்தைக் கொண்டு வரையப்பட்டள்ளது இவை குறைந்தது 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என பாறை ஓவிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்னர் வேட்டவலத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் நீலத்தாங்கல் பகுதியிலும் பல நூற்றாண்டுக்கு முந்தைய பாறை ஓவியங்களை மாவட்ட வரலாற்று நடுவத்தின் குழுவினர் கண்டறிந்து ஆவணப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதியில் உள்ள தொல்லியல் தடயங்களைத் தேடி கண்டுபிடித்து வெளிப்படுத்த தொடர் ஆய்வுகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இது குறித்து வரலாற்று நடுவத்தின் செயலாளர் பாலமுருகனிடம் கேட்டபோது
உலகின் பல நாடுகளில் இத்தகைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாகப் பிரான்சு, இத்தாலி, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கூறலாம். இந்நாடுகளில் கிடைத்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் போலவே இந்தியாவிலும் பல இடங்களில் இப்பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. முதல் முதலாக உலகில் பாறை ஓவியமானது ஸ்பெயின் நாட்டில் அல்டமிரா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பீம்பேட்கா என்னுமிடத்திலும், தமிழகத்தில் மல்லபாடி என்னும் இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை ஐம்பது இடங்களுக்கு மேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவதற்கு இதற்கு பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவற்றுள் பல்வேறு கண்டங்களையும் தாண்டிய சில பொதுவான பண்புகளுடன் விளங்குகின்றன என்பதை அறிஞர்கள் இந்த ஓவியங்களை வைத்து கூறுகின்றது.
பல்வேறு கண்டங்களிலும் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில், அவற்றின் தோற்றம், குறியீடுகள், அவை வெளிப்படுத்தும் சிந்தனைகள் ஆகியவை பொதுவானதாக அமைகின்றன. இதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள் ஓவியங்கள் மூலம் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தினர் என்பதை அறிய முடிகிறது. ஜான் காலிங்வுட், ரொனால்டு மோரிஸ் ஆகியோர் இவ்வோவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.
அதுமட்டும் இன்றி நம் மாவட்டத்தில் பல இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் சிறப்புடையதாக வேட்டவலம் பகுதியில் உள்ள பாறை ஓவியங்கள் போன்று தென்மாதிமங்கலம் மலை பகுதியில் வட்ட வடிவில் பாறை ஓவியங்களும் கண்டுள்ளோம் என்றார்.