Trump Vs LA Protest: கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
லாஸ் ஏஞ்சல்ஸில், 100-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதால் போராட்டம் வெடித்தது. அதை ஒடுக்க ட்ரம்ப் தேசிய பாதுகாப்புப் படையை இறக்கியதால், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ரெய்டு நடத்தி, சட்டவிரோதமாக குடியேறிய 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதை எதிர்த்து நகர் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. அதை ஒடுக்க ட்ரம்ப் அரசு தேசிய பாதுகாப்பு படையை இறக்கியதால், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் கலவர பூமியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகள்
அமெரிக்காவிற்குள், சட்டவிரோதமாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் குடியேறி வசித்து வருபவர்களை கண்டறிந்து, நாடு கடத்தும் நடவடிக்கையில் ட்ரம்ப் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், ட்ரம்ப் உத்தரவின் பேரில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல இடங்களில் தீவிர சோதனை நடத்திவரும் தேசிய பாதுகாப்புப் படை, 100-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து கைது செய்துள்ளது.
ட்ரம்ப்பை எதிர்த்து மக்கள் போராட்டம் - கலவர பூமியான LA
இதையடுத்து, ட்ரம்ப் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 3 நாட்களாக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் மற்றும் கலிஃபோர்னியா கவர்னர் கவின் நியூசம் ஆகியோர், ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, போராட்டம் நடத்தும் மக்களை ஒன்றுகூட விடாமல், லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாரும், தேசிய காவல்படையினரும் தடுத்து வருகின்றனர். அமைதியாக இருந்த கூட்டத்தை கலைக்க, போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய நிலையில், பதிலுக்கு போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு, நகரில் பதற்றம் நிலவுகிறது.
கெடுபிடி காட்டும் ட்ரம்ப் கூறியது என்ன.?
லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம் குறித்த வீடியோக்கள் வேகமாக பரவிவரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது ட்ரூத் சமூக வலைதளத்தில் போட்டுள்ள பதிவில், ஒரு காலத்தில் அமெரிக்காவின் சிறந்த நகராமாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ், தற்போது, சட்டவிரோத வேற்றுகிரக வாசிகள் மற்றும் குற்றாவாளிகளால் படையெடுக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது கிளர்ச்சிக் கும்பல்கள் தங்கள் கூட்டாட்சி ராணுவத்தை தாக்கி வருகின்றன என்றும், ஆனால், இந்த சட்டவிரோத கலவரங்கள் தங்கள் உறுதியை வலுப்படுத்துவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதோடு, உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி ஆகியோரிடம், அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை, புலம்பெயர்ந்தோர் படையெடுப்பிலிருந்து விடுவிக்கவும், கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்துவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
கலிஃபோர்னியா கவர்னரின் கடிதத்திற்கு ட்ரம்ப் பதில்
இதனிடையே, கலிஃபோர்னியா கவர்னர் கவின் நியூசம் ட்ரம்ப்புக்கு எழுதிய கடிதத்தில், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து தேசிய பாதுகாப்புப் படையை வெளியேற்ற வேண்டும் எனவும், அவர்கள் அங்கு இருப்பதால் பதற்றம் அதிகரிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ட்ரம்ப்பின் நடவடிக்கை மாநிலத்தின் அதிகாரத்தை சிதைக்கும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், கலிஃபோர்னியா கவர்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் போன்றோர், போராட்டங்களை கட்டுப்படுத்தத் தவறியதால், தேசிய பாதுகாப்புப் படையின் நடவடிக்கை தேவைப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் வன்முறையாளர்கள் தப்பிக்கப் போவதில்லை என்றும், எல்லா இடங்களிலும் படைகள் இருப்பதாகவும், பைடன் ஆட்சியில் அமெரிக்கா சிதறியதைப் போல் தற்போது நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.





















