Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
சென்னையில் பல இடங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்கள் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்துள்ள நிலையில் தற்போது பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றே பல இடங்களில் மழை பெய்த நிலையில், இன்றும் பல இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
சென்னையில் சூறைக்காற்றுடன் மழை:
சென்னையில் மதியம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பல இடங்களிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
ஆயிரம் விளக்கு, திருவேற்காடு, வடபழனி, கோயம்பேடு, பாரிமுனை, தேனாம்பேட்டை, கிண்டி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. திடீரென பெய்த இந்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த மழை அடுத்த சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் சொல்வது என்ன?
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக சேலம் மேட்டூர், தர்மபுரி பென்னாகரத்தில் தலா 7 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
Tamil Daily Weather Repot pic.twitter.com/Iu3DG5dg8J
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 9, 2025
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 1-3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-4 டிகிரி செல்சியிஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது.
அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு:
தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய ( மணிக்கு 30 கி.மீட்டர் முதல் 40 கி.மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (10ம் தேதி) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய ( மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
காத்திருக்கும் கனமழை:
நாளை மறுநாள் வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய ( மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
12, 13 எப்படி?
வரும் 12ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 13ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 14ம் தேதி மற்றும் 15ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், கனமழை முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















