Aavin Paneer : அதிரடியாக உயர்ந்த ஆவின் பனீர் விலை... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தி.மு.க., கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பொறுப்பேற்றதும் பால் விலையினை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது.
பால் விற்பனை மற்றும் பால் சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனைக்காக தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருவது ஆவின்நிர்வாகம். தமிழ்நாட்டில் ஆவின் பாலை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆவின் நிர்வாகமும் பாலை பதப்படுத்தி பல்வேறு வகைகளில் விற்பனை செய்து வருகிறது.
அதேபோல், சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்தும் ஆவின் பாலையே பெரிதும் நம்பியுள்ளன. விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் பலரும் நேரடியாக தங்களிடம் உள்ள பாலை ஆவின் நிர்வாகத்திடம் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த்தநிலையில், தற்போது பால் விலையை குறைத்து பனீர் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது ஆவின் நிறுவனம். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், லிட்டருக்கு ஆவின் பால் 3 ரூபாய் குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, தி.மு.க., கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பொறுப்பேற்றதும் பால் விலையினை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது.
Aavin Paneer- where desires meet delicious! pic.twitter.com/hiWzhBQcEe
— Aavin TN (@AavinTN) January 27, 2022
இதனால், ஆவின் பால் விற்பனை அதிகரிக்கும் என தமிழ்நாடு அரசு மிகவும் எதிர்பார்த்தது. ஆனால், விற்பனையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றும், இதனால் பால் விலையை குறைத்த ஆவின் நிறுவனம் நஷ்டத்தை தவிர்க்க பனீர் விலையை உயர்த்தியுள்ளது.
கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை, 200 கிராம் பனீர் பாக்கெட் 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், தற்போது, 15 ரூபாய் வரை உயர்த்தி 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 15 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் ஆவின் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆவின் அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், மற்ற நிறுவனங்களின் பனீரை காட்டிலும், ஆவின் பனீருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதே போல, மற்ற நிறுவனங்களின் பனீர் விலையை காட்டிலும், ஆவின் நிறுவனத்தின் பன்னீர் விலை மிகவும் குறைவுதான். இதனால், ஒரு சிலர் மொத்தமாக ஆவின் பன்னீரை குறைந்த விலைக்கு வாங்கி அதனை தங்கள் நிறுவனத்தின் பெயரை பதிவிட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை தவிர்ப்பதற்காக, பனீர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்