Pongal 2022 | பெண்கள் போற்றும் ஆரணி கைத்தறி பட்டு! பளபளக்கும் பொங்கல் பட்டும்... தனிச்சிறப்பும்..
பட்டு நகரமான ஆரணி பகுதியில் பொங்கல் பண்டிகை மற்றும் தை மாதத்தை முன்னிட்டு பெண்கள் போற்றும் கைத்தறி பட்டு புதிய ரகங்களளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
பட்டுச் சேலை என்றாலே பெண்களுக்குப் பரவசமும் ஆண்களுக்குப் பகீர் ஜுரமும் வருவது இயல்புதான். ஆரணிப்பட்டு, தமிழகத்தின் அழகு அடையாளங்களில் ஒன்று. பட்டு என்றாலே, காஞ்சிப் பட்டு என்கிறார்கள். ஆனால், ஆரணி பட்டு காஞ்சிப் பட்டுக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை. ஆரணியில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பட்டு நெசவுத் தொழிலை நம்பி இருக்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் பட்டுப் புடவைகளை வாங்கிச் சென்று காஞ்சிபுரம் பட்டு என்று விற்கும் விற்பனையாளர்களும் உண்டு!'' என்கிறார்கள் ஆரணி பகுதி நெசவாளர்கள். பட்டுப் புடவைக்குத் தேவையான பட்டு நூல், பெங்களூரு இருந்து வரவழைக்கப்படும். மல்பரி புழுவின் கூட்டில் இருந்து இந்தப் பட்டுநூல் தயாரிக்கப்படுகிறது. ஒரு சேலைக்கு சுமார் ஒன்றரை கிலோ நூல் தேவைப்படும். கச்சா நூலை பட்டு நூல் ஆலையில் கொடுத்துப் பாவு செய்து, அதன் மீது கலர் சாயம் ஏற்றப்படுகிறது.
நீளம், அகலத்துக்கு ஏற்ப தனித் தனியாகப் பிரித்து நெசவுக்குக் கொடுத்தால், பட்டுச் சேலை ரெடி. கிட்டத்தட்ட ஒரு லட்சம் சேலை டிசைன்கள் உண்டு. டிசைனைப் பொறுத்து, ஒரு சேலைக்கு 60 கிராம் முதல் 1 ,1/2 கிலோ வரை பட்டு ஜரிகை தேவைப்படும். தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜரிகை விலையும் கூடுகிறது. இதனால், சேலையின் விலையும் அதிகரித்து விடுகிறது. கைத்தறி கையினால் பயன்படுத்தப்படும் தரியின் மூலம் ஒரு பட்டுப் புடவையைச் செய்து முடிக்க, 10 முதல் 15 நாட்கள் ஆகும். இயந்திரம் மூலம் நெய்யப்படும் ஒரு பட்டுப்புடவை செய்து முடிக்க 4, முதல் 7 நாட்கள் வரை ஆகும். இங்கு பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை, பட்டு வேட்டி, பட்டு அங்கவஸ்திரம் என்று விதவிதமான பட்டு ஆடைகள் தயாரிக்கிறோம்.
ஆரணி கைத்தறி பட்டு சேலைகள் வாங்க வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஆரணி கைத்தறி பட்டு புடவையை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். இது மட்டுமின்றி வெளிமாவட்டம் ,வெளிமாநிலத்திற்கு பட்டு ஏற்றுமதி செய்யபட்டு வருகின்றன.மேலும் தமிழர் திருநாளான , பொங்கல் பண்டிகைக்கு பெண்கள் விரும்பி உடுத்துவது பட்டு சேலைகள் இதனால் பொங்கல் பண்டிகைக்கு பலவிதமான வண்ணமயமான ரகங்களில் கைத்தறி பட்டு சேலைகளை நெசவாளர்கள் நெய்து விற்பனை செய்வது வருகின்றனர்.
ABP NADU நிறுவனத்திற்காக, பட்டு சேலைகள் உற்பத்தியாளர் கோகுல கிருஷ்ணனிடம் பேசுகையில்;
எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்து தலைமுறை, தலைமுறையாக பட்டு சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்று கூறும் பழமொழிக்கு ஏற்றார் போல் பொங்கல் திருநாளுக்கும், இதன் பிறகு வரும் முகூர்த்த நாட்களுக்கும் புதிய டிசைன்கள் போடி, கரைப்புட்டா, வித்தோட் பார்டர் கரைகள், பாட்டி ரகம், உடல் சிறப்பு , சாமுத்திரிகா , பழைய காலத்தில் தயாரிக்கப்பட்ட ஒருபக்க சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கலுக்கு மற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் விதமாகவும் குறைந்த விலையில் பட்டு சேலைகளை உற்பத்தி செய்துள்ளோம். பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிக அளவில் பட்டு சேலைகள் விற்பனை நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்தார்.
கடையில் பட்டுப்புடவை வாங்குவதற்கு வந்தபெண்ணிடம் பேசுகையில், “தீபாவளி பண்டிகை, பிறந்தநாள் மற்றும் உள்ளூர் கோவில் திருவிழாக்கள் போன்ற வகைகளில் அதிக அளவில் நாங்கள் சுடிதார், குர்தி, ஜீன்ஸ் போன்ற துணிகளைத்தான் வாங்கி அணிவோம் ஆனால் பொங்கல் திருவிழா, என்றால் "தமிழர்களின் திருவிழா" அதனால் நாங்கள் தமிழர்களின் கலாச்சாரமான பாரம்பரிய உடை சேலைகள்தான். அதில் பட்டு சேலைகள் மிகவும் அழகாக இருக்கும் அதிலும் பெண்களுக்கு நேர்த்தியாக இருக்கக்கூடியதும், பெண்களை அழகாக காட்டக்கூடியது பட்டு சேலைகள்தான். அதனால் பட்டு சேலைகள் எடுப்பதற்கு வந்துள்ளேன். பட்டு சேலை உடுத்துக்கொண்டுதான் பொங்கல் வைத்து பொங்கல் தினத்தை கொண்டாட போறேன்” என்று தெரிவித்தார்.