அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
தள்ளிக்கி வந்தனம் (தாய்க்கு வணக்கம்) என்ற திட்டத்தின்கீழ், பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு குழந்தையின் தாய்க்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளின் தாய்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஆந்திர அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ரூ.8,475 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தள்ளிக்கி வந்தனம் (தாய்க்கு வணக்கம்) என்ற திட்டத்தின்கீழ், பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு குழந்தையின் தாய்க்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
ஆட்சியைப் பிடித்து ஓராண்டு நிறைவு
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்து ஓராண்டு நிறைவு அடையும் நிலையில், இந்தத் திட்டத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்துள்ளார்.
முன்னதாக 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், சூப்பர் சிக்ஸ் திட்டத்தின்கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்ட வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு அளித்திருந்தார். இதன்படி, 19 முதல் 59 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும், இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகை, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் ஆகிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இத்துடன் தள்ளிக்கி வந்தனம் திட்டமும் கூறப்பட்டு இருந்தது.

67 லட்சம் பேர் பயன் அடையும் திட்டம்
இந்தத் திட்டத்தின் மூலம் 67 லட்சம் பேர் பயன் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
எந்த ஆண்டு முதல்?
மாணவர் சேர்க்கை முடிந்து, மாணவர்களின் தரவு கிடைத்ததும், உதவித் தொகை அந்தந்த தாய்மார்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 'தள்ளிக்கி வந்தனம்' திட்டத்தின் கீழ், இந்த நேரடிப் பணப் பரிமாற்றம் 2024-25 கல்வியாண்டிற்கானதா அல்லது 2025-26 கல்வியாண்டிற்கானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.























