தஞ்சையில் முதலமைச்சர் வருகை: உற்சாக வரவேற்பு! ராட்சத பலூன் பறக்கவிட்ட அமைச்சர்
தஞ்சைக்கு வரும் 15, 16 தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

தஞ்சாவூர்: தஞ்சைக்கு வருகை தரும் முதலமைச்சரை வரவேற்கும் விதமாக ராட்சத பலூனை அமைச்சர் கோவி. செழியன் பறக்க விட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 15 மற்றும் 16 தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, கருணாநிதி சிலை திறப்பு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ இல்ல திருமண வரவேற்பு விழா என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை வருகையை முன்னிட்டும், அவரை வரவேற்கும் விதமாகவும் பெரிய அளவிலான ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் எம்.பி., முரசொலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ., டி.கே.ஜி.நீலமேகம், செல்வம், மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ராட்சத பலூனை பறக்க விட்டனர்.
பின்னர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சைக்கு வரும் 15, 16 தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல்வர் தஞ்சை வருகையை முன்னிட்டு மத்திய, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக முதலமைச்சரை வரவேற்கும் விதமாக தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. மொத்தம் தஞ்சை மாநகரில் 3 இடங்களில் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் தண்ணீர் திறந்து விட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் விதைநெல், இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தட்டுபாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பாகவே ஆறு, குளம், வாய்க்கால்கள் தூர்வாருவது குறித்து முடிவு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டன. கடைக்கோடி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.
கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள், மாணவர் பிரதிநிதிகள், பெற்றோர் சங்க நிர்வாகிகள் என ஐவர் அல்லது ஏழு பேர் கொண்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாணவர்கள் கல்லூரி வருவது முதல் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வது வரை கண்காணிப்பர். மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. எனவே பள்ளி, கல்லூரிகளில் ராகிங் குற்றம் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியலில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தொடர்ந்து வந்த கோரிக்கை. அதனை தடையில்லாமல் நிறைவேற்றி வருகிறோம். கடந்த 4, 5 ஆண்டுகளில் தேர்வு எழுத முடியாமல் விடுப்பட்ட மாணவர்களும் தொடர்ந்து படிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைநிற்றல் என்பது தொழில்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக்கிலும் இருக்க கூடாது என்பதற்காகவும், இடைநிற்றல் இல்லாத தொழில்கல்வி இருக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதன் மூலம் இடைநிற்றல் என்பது உயர்கல்வியிலும் இல்லை என்ற நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















