பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: திடீரென அந்தப் பகுதி முழுவதும் புகை நிரம்பியது. இங்கே ஒரு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த விபத்து நடந்திருப்பதைக் கண்டோம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா போயிங் ட்ரீம் லைனர் விமானம், இன்று (ஜூன் 12) மதியம் விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த 242 பயணிகளும் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
200 பேரின் சடலங்கள் மீட்பு
இந்த நிலையில் தற்போது வரை 200 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானம் கீழே மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது மோதியதால், அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பயிற்சி மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர். 5 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தை நேரில் கண்ட சாட்சி என்று கூறிய ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறும்போது, "எனது அலுவலகம் இங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. நான் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவுடன், மிகவும் பலத்த சத்தம் கேட்டது,
குப்பை, தீ, புகை
திடீரென அந்தப் பகுதி முழுவதும் புகை நிரம்பியது. இங்கே ஒரு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த விபத்து நடந்திருப்பதைக் கண்டோம். நான் அந்த இடத்தை அடைந்தபோது, இங்கே குப்பைகள் சிதறிக் கிடந்தன, தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இங்கு புகை கிளம்பியது. எதுவுமே தெரியவில்லை.
#WATCH | Ahmedabad plane crash | A man, who claims to be an eyewitness, says, "...I have my office 200 metres from here. As soon as I stepped out of the office, I heard a very loud noise, and smoke filled the area suddenly. A commotion broke out here and then we saw that this… pic.twitter.com/xcXoeIwVEH
— ANI (@ANI) June 12, 2025
பிறகுதான் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது என்று எங்களுக்குத் தெரிய வந்தது... உயிரிழப்புகள் பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால் மருத்துவர்கள் வசிக்கும் ஒரு கட்டிடம் இங்கே உள்ளது. விமானத்தின் இறக்கைகள் இங்கேதான் விழுந்தன.." என்று தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
விபத்துக்கு ஆளானவர்களை அடையாளம் காண, அவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் அகமதாபத் மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






















