கோரிக்கை வைத்த பனைத் தொழிலாளர்கள் - ஒரு கோடி பனை விதைகள் நட நடவடிக்கை எடுத்த அரசின் உத்வேகம்…!
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 22 லட்சம் பனை விதைகள் நடும் திட்டம்… பங்கேற்று தொடங்கி வைத்த அமைச்சர்…!
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி, வெள்ளப்பட்டி, ஏர்வாடி நரிப்பையூர் கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரெகுநாதபுரம், பெரியபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இப்பகுதிகளில் ரியல் எஸ்டேட் அமைக்கவும்,செங்கல் சூலைகளுக்கும் விளை நிலத்தில் வளர்ந்துள்ள பனை மரங்களை வெட்டி அழிக்கும் போக்கு தொடர்கிறது. ஒரு பனை மரத்திற்கு தலா ரூ.250 முதல் ரூ.350 வரை கொடுத்து பனை மரங்களை மொத்தமாக விலைக்கு வாங்கும் வியாபாரிகள், கூலித் தொழிலாளிகள் மூலம் அவற்றை பல்வேறு துண்டுகளாக வெட்டி டிராக்டர்களில் செங்கல் சூளைகளுக்கு அனுப்புகின்றனர்.
பூலோகத்தின் கற்பகத் தருவாக விளங்கும் பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்படும் நிலையில் தொடர்ந்து அழிக்கப்படுவதால் அதனை நம்பியுள்ள பனைமரத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. இப்பகுதியில் பனை ஓலையில் இருந்து பாய் முடைதல், புளிப்பட்டி மலர் மற்றும் கருவாட்டு பெட்டி உள்ளிட்டவைகள் முடைகின்றனர். இளங்குருத்தில் இருந்து இடியாப்பம் பெட்டி, கடையப்பட்டி, விசிறி, தொப்பி உள்ளிட்ட கலைநய பொருள்களும் செய்து வருமானம் ஈட்டுகின்றனர்.
தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்களால் பனைத் தொழில் பாதிப்பை சந்திக்கிறது. எனவே அரசின் பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தினர் பனை மரத்தை அழிவிலிருந்து காக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரத்தை கிராமங்களில் இருந்து துவங்க வேண்டும் என பனைத் தொழிலாளர்களும், கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பனைமரத்தின் ஆயுட்காலமானது 100 ஆண்டுகள். அதேநேரத்தில் பனை ஓலையின் ஆயுட்காலம் என்பது சுமார் 400 ஆண்டுகள். சங்ககாலத்தில் ஓலைச் சுவடியில் இலக்கியங் கள் எழுதப்பட்டுள்ளன. இப்படியாக தமிழர் வாழ்வில் ஒன்றாக இணைந்திருந்த பனைமரத்தை வெட்டி சாய்ப்பது என்பது கொடிய செயலாகும். பனைமரத்தின் முக்கியத் துவத்தை சில இளைஞர்கள் உணர்ந்துள்ளதால், பனைவிதைகளை விதைக்க தொடங்கி உள்ளனர். இதற்கு, அரசும் உதவுகிறது. அதே நேரத்தில் அனைத்து உயிர்களுக்கும் நூறாண்டு உதவும் பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். கடத்தல்காரர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல் சூளைக்கு பனைமரத்துக்கு வெட்டி எரிப்பதற்கு பதிலாக, நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி பயன்படுத்தலாம் என்பதும் பனைத் தொழிலாளர்களின் கூற்றாக இருக்கிறது.
இதனை அடுத்து தமிழக முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடுவதற்கு தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று தொடங்கி வைத்து பனை விதைகளை நட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் கிராமத்தில் தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து மாவட்டம் முழுவதும் 22 லட்சம் பனை விதைகள் நடும் துவக்க விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் என்பதால் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் 22 லட்சம் பனை விதைகள் நடப்பட உள்ளன. பனைமர விதைகள் நடும் விழாவிற்கு சமூக நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி பனைமர விதைகளை நட்டு பொதுமக்களுக்கும் பனை விதைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.