HC on Ponmudi: இழிவான பேச்சு.. அமைச்சர் பொன்முடியை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்..
சைவ, வைணவ மதங்களையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில், அமைச்சர் பொன்முடியை உயர்நீதிமன்றம் வெளுத்து வாங்கியுள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், அவரது பேச்சை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அத்தகைய வழக்கு ஒன்றில், சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை வெளுத்து வாங்கியுள்ளது.
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு
திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும், தமிழக அமைச்சராகவும் பதவி வகித்து வரும் பொன்முடி, சமீபத்தில், சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். ஒரு மேடையில் பேசிய அவர், விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதை குறிப்பிட்டு பட்டையா அல்லது நாமமா? என்ற கேட்டு அதற்கு கீழ்தரமான விளக்கம் ஒன்றை கொடுத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரது கண்டனத்தையும் பெற்றது. இதையடுத்து இவரது பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமன்றி, திமுக கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியதற்கு ஆதாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. எதிர்காலத்தில் பொன்முடியை போன்று யாரும் பேசிவிடக்கூடாது எனவும் கருத்து தெரிவித்தது.
இதுகுறித்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பொன்முடி மீது ஐந்து இடங்களில் புகார் வந்துள்ளன என தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்த மறு விசாரணையில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. அதாவது, “பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யுங்கள். பல வழக்குகள் பதிவு செய்தால் நீர்த்து போய்விடும். எதிர்காலத்தில் பொன்முடி போன்று யாரும் பேசக்கூடாது.
பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளது” எனத் தெரிவித்தது.
இன்றைய விசாரணையில் பொன்முடியை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்
இந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின்போது, அமைச்சர் பொன்முடியின் பேச்சு, சைவ, வைணவ சமயத்தினரையும் புண்படுத்தியுள்ளது என்றும், அவர் பேசியது வெறுப்பு பேச்சு என்ற குற்றச்சாட்டில் வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சைவ, வைணவ சமயங்கள் தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், சைவ சமயத்தின் விபூதி பட்டையும், வைணவத்தின் நாமமும் புனிதமானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட புனிதமான பட்டை, நாமத்தை, விலைமாது சேவையுடன் ஒப்பிட்டு பொன்முடி பேசியுள்ளார், அவரது கருத்துக்கள் பெண்கள், சைவ, வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என நீதிமன்றம் கூறியுள்ளது.
அதோடு, மத உணர்வுகளை பாதிக்கும் வகையிலும் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார் எனவும், ஆபாசமாக மட்டுமல்ல, இரு சமயங்களை சேர்ந்தவர்களை புண்படுத்தும் வகையிலும் அவர் பேசியுள்ளதாக சாடியுள்ளது உயர்நீதிமன்றம்.
மேலும், அமைச்சராக உள்ளவர் என்பதால் காவல்துறை அவருக்கு சலுகை வழங்க முடியாது என்றும், பேசியதை பொன்முடி ஒப்புக்கொண்டுள்ளார், கட்சி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது, ஆனால் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவல்துறை நடவடிக்கை எடுக்காதது துரதிஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் நடவடிக்கை என்ன.? - நீதிமன்றம்
அமைச்சர் மீது பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பிணையில் உள்ள அமைச்சர், மேல் முறையீடு செய்து, வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.





















