"சும்மா விட மாட்டோம்" பயங்கரவாதிகளுக்கு எதிராக சூளுரைத்த ராஜ்நாத் சிங்
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை மட்டும் இல்லாமல் அதன் பின்னணியில் இருப்பவர்களையும் தேடி கண்டுபிடிப்போம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

பஹல்காமில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாகவும் அவர்களின் குடும்பத்தாருக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
"ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்"
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று (ஏப். 22) மாலை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்க, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை மட்டும் இல்லாமல் அதன் பின்னணியில் இருப்பவர்களையும் தேடி கண்டுபிடிப்போம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பஹல்காமில் நடந்த கோழைத்தனமான செயலில் பல அப்பாவி உயிர்களை இழந்துள்ளோம்.
ராஜ்நாத் சிங் என்ன பேசினார்?
நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைபாட்டை மீண்டும் உறுதிபட கூற விரும்புகிறேன். பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம்.
#WATCH | #PahalgamTerrorAttack | Delhi: Raksha Mantri Rajnath Singh says, "We lost many innocent lives in the cowardly act in Pahalgam. We are deeply distressed. I express my condolences to the families who lost their loved ones... I want to repeat India's resolve against… pic.twitter.com/OhuX8rkghy
— ANI (@ANI) April 23, 2025
அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்தச் செயலைச் செய்தவர்களை மட்டுமல்ல, இதன் பின்னால் இருப்பவர்களையும் நாங்கள் தேடி கண்டுபிடிப்போம். குற்றவாளிகளுக்கு விரைவில் உரத்த, தெளிவான பதிலடி அளிக்கப்படும் என்பதை நான் நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன்" என்றார்.
இந்த தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கொல்வதற்கு முன்பு நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என கேள்வி கேட்டு பயங்கரவாதிகள் கொலை செய்ததாகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆண்களுமே குறிவைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

