IPL 2025 MI vs SRH: ரோகித் ருத்ரதாண்டவம்! மும்பை மீண்டும் மிரட்டல் வெற்றி! கவலைக்கிடத்தில் ஹைதராபாத்!
IPL 2025 MI vs SRH: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று ஹைதரபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. கட்டாய வெற்றி கட்டாயத்தில் களமிறங்கி முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி பந்துவீச்சில் தாக்குதல் நடத்தியது.
143 ரன்கள் டார்கெட்:
35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணியை கிளாசென் - அபினவ் மனோகர் ஜோடி காப்பாற்றியது. இதனால், 143 ரன்கள் மும்பைக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, 143 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பைக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி தொடக்கம் தந்தார். ரிக்கெல்டன் 2 பவுண்டரிகளுடன் 8 பந்தில் 11 ரன்களுக்கு அவுட்டானாலும், அடுத்து வந்த வில் ஜேக்சை வைத்துக்கொண்டு ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார்.
ரோகித் காட்டடி:
அவர் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி அனைவரையும் குஷிப்படுத்தினர். சென்னை அணிக்கு எதிரான போட்டி மூலம் ஃபார்முக்கு வந்த ரோகித் சர்மா கம்மின்ஸ், உனத்கட், ஹர்ஷல் படேல், ஈசன் மலிங்கா, ஜீசன் அன்சாரி என யார் வீசினாலும் அதிரடி காட்டினார். இதனால், ஓவருக்கு 10 ரன்கள் ரன் ரேட்டுடன் இலக்கை நோக்கி எளிதாக முன்னேறியது.
சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா அரைதசம் விளாசினார். வெற்றியை நோக்கி நெருங்கிய நேரத்தில் ரோகித் சர்மா அவுட்டானார். அவர் 46 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார். வில் ஜேக்ஸ் அதற்கு முன்பாக 22 ரன்னில் அவுட்டாக, சூர்யகுமார் யாதவ் இனிதே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட்டத்தை முடித்து வைத்தார்.
மும்பை அபார வெற்றி:
15.4 ஓவர்களில் 146 ரன்களை எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி அபுார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்தும், திலக் வர்மா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். உனத்கட், ஈசன் மலிங்கா, ஜீசன் அன்சாரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய 5வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் அணி தன்னுடைய 6வது தோல்வியால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இனி வரும் ஒவ்வொரு போட்டியும் ப்ளே ஆஃப் வாய்ப்பிற்கான போட்டியாக மாறியுள்ளது.

