Watch Video: மணமாகி 6 நாட்களில் மரணம்; கண்ணீருடன் கணவருக்கு இறுதிவிடை- கதறிய இளம் மனைவி!
கண்டிப்பாக ஒவ்வொரு வகையிலும் அவரை நாங்கள் பெருமைப்படுத்துவோம். அவரால்தான் இந்த உலகு இன்னும் பிழைத்திருக்கிறது- ஹிமான்ஷி நர்வால்.

திருமணம் முடிந்த கையோடு காஷ்மீருக்குத் தேனிலவு சென்றிருந்த ஹரியானாவைச் சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் (26) பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இறுதிச் சடங்கில் அவரது மனைவி “ உங்களை கண்டிப்பாக பெருமைப்படுத்துவோம்... “ என்று கதறி அழும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம், பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று மாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.
கடற்படை அதிகாரி வினய் நர்வால் பலி
இதில், காஷ்மீருக்குத் தேனிலவு சென்றிருந்த இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார். ஹரியானாவைச் சேர்ந்த வினய் நர்வாலுக்கு வயது 26. கொச்சினில் பணியாற்றிக் கொண்டிருந்த அவருக்கு, ஏப்ரல் 16ஆம் தேதிதான் திருமணம் ஆனது. ஏப்ரல் 19ஆம் தேதி வரவேற்பு முடிந்த கையோடு, தம்பதிகள் காஷ்மீருக்குத் தேனிலவு சென்றனர்.
அங்கு பேல் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடைபெற்றது. இதில் சம்பவ இடத்திலேயே வினய் நர்வால் உயிரிழந்தார். கணவரின் உடலோடு, மனைவி ஹிமான்ஷி அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இந்தியாவையே உலுக்கியது.

தொடர்ந்து வினய் நர்வாலுக்கான இறுதிச் சடங்கு தற்போது நடைபெற்றது. அவரின் மனைவி ஹிமான்ஷி இறுதிச் சடங்கின்போது, ’’அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர் எங்கிருந்தாலும் சிறப்பான வாழ்க்கையையே கொண்டிருப்பார்.
கண்டிப்பாக ஒவ்வொரு வகையிலும் அவரை நாங்கள் பெருமைப்படுத்துவோம். அவரால்தான் இந்த உலகு இன்னும் பிழைத்திருக்கிறது. அவரால் நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்’’ என்று ஹிமான்ஷி நர்வால் கதறி அழுகிறார்.
கணவரின் உடல் இருக்கும் பெட்டியைக் கட்டி அணைத்துக்கொண்டே அவர் கதறி அழும் காட்சி, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






















