7 ஆண்டுக்கு பின் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா தடை நீக்கம்...! இருதரப்பு மக்களும் மகிழ்ச்சி...
5ம் நாள் விழாவின் ( துயில் உற்சவம்) போது ஒரு தரப்பினர் பகுதிக்கு சாமி ஊர்வலம் செல்லும் போது, பொதுவான இடத்தில் நிறுத்தி அப்பகுதி மக்கள் பூஜை செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது

விழுப்புரம் : மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த விதிக்கப்பட்ட தடை, 7 ஆண்டிற்கு பின் நீக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில். இக்கோவிலில் பொதுமக்கள் சார்பில் 10 நாள் திருவிழா நடத்துவது வழக்கம். இந்தக் கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கு இடையே கடந்த ஏழு ஆண்டுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மேற்கொண்டு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க கோயில் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் தடை விதித்தனர். தொடந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இரு தரப்பினரும் சமாதானம் ஆகும் வரை கோவில் திருவிழாவை நடத்த வருவாய் துறையினர் தடை விதித்தனர்.
இதனால், கடந்த 7 ஆண்டாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு தரப்பினர் கோவில் திருவிழா நடத்தாதை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். அதிகாரிகள், தேர்தலுக்கு பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாபு முன்னிலையில் இரு தரப்பு முக்கியஸ்தர்களுடன் சமரச கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா வழக்கம் போல் நடத்தலாம். ஆனால் 5ம் நாள் விழாவின் ( துயில் உற்சவம்) போது ஒரு தரப்பினர் பகுதிக்கு சாமி ஊர்வலம் செல்லும் போது, பொதுவான இடத்தில் நிறுத்தி அப்பகுதி மக்கள் பூஜை செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. அதனை இரு தரப்பினரும் ஏற்று கொண்டதால், விழா நடத்த விதிக்கப்பட்ட தடையை வருவாய் துறையினர் நீக்கி உத்தரவு பிறப்பித்தனர். 7 ஆண்டாக திருவிழா நடைபெறாமல் இருந்த கோவிலுக்கு தீர்ப்பு கிடைத்தநிலையில் இருதரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

