சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் நேரில் ஆஜராக சம்மன் ஒட்டப்பட்ட நிலையில், அதை சில நிமிடங்களில் சீமான் உதவியாளர் கிழித்தெறிந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக அவர் மீது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன்:
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 12 வாரங்களில் சீமான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்குத் தொடர்பாக சீமான் மீது குற்றம் சாட்டிய நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, சீமான் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில் அவர் இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராக வளசரவாக்கம் காவல் நிலையத்தினர் அவருக்கு சம்மன் வழங்கினர். சட்டப்படி சம்மன் வழங்கப்பட்டால் வழங்கப்படுபவரின் வீட்டில் சம்மன் நோட்டீஸாக ஒட்டப்பட்டது. இதன்படி, சீமான் வீட்டின் கதவிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சம்மன் வழங்கப்பட்ட நிலையில், சீமான் நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்புகள் மிக அதிகளவில் உள்ளது.
கிழித்தெறிந்த உதவியாளர்:
இதன் காரணமாக இந்த சம்மன் அவரது வீட்டில் ஒட்டப்பட்டது. சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் சீமானின் உதவியாளர் அந்த சம்மனை கிழித்தார். இதையறிந்த போலீசார் சீமான் வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது சீமான் வீட்டு காவலாளி, போலீஸ் சீருடையில் இல்லாத காவலரை உள்ளே செல்ல முயன்றபோது தடுத்ததாக கூறப்படுகிறது.
போலீசாரை தாக்கிய காவலாளி:
இதனால், அவருக்கும் அந்த போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினரை அவர்களது பணி செய்ய விடாமல் தடுத்ததன் காரணமாக அவரை போலீசார் குண்டுக்கட்டாக இழுத்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
துப்பாக்கி பறிமுதல்:
மேலும், அவரிடம் இருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சீமான் ஆஜராகுமாறு சம்மன் ஒட்டப்பட்டு, அந்த சம்மன் சில நிமிடங்களில் கிழிக்கப்பட்டு போலீசாருக்கும், அவரது வீட்டு காவலாளிக்கும் மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்மனை கிழித்த நபரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சம்பவம் நிகழ்ந்தபோது சம்பவ இடத்தில் இருந்த சீமானின் மனைவி போலீசாரிடம் மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகிறது. போலீசார் அழைத்துச் சென்ற சீமான் வீட்டு காவலாளி முன்னாள் ராணுவ வீரர் என்றும், அவரிடம் இருந்த துப்பாக்கி உரிமம் பெற்றது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

