"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
கோவாவில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு கோவா கடற்கரை ரிசார்ட்களில் விற்கப்பட்ட இட்லி, சாம்பாரே காரணம் என பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ பழி போட்டுள்ளார்.

கடற்கரை ரிசார்ட்களில் இட்லி, சாம்பார் விற்பதால் கோவாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் வருகை குறைந்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், தென் மாநில உணவு குறித்து பாஜக எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இட்லி, சாம்பார் மீது பழி போட்ட பாஜக எம்எல்ஏ:
பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்கள் குறித்தும் தென்னிந்திய மக்களின் பழக்க வழக்கங்கள் தொடர்பாகவும் பாஜக தலைவர்கள் பேசிய கருத்துகள், மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தென் மாநிலங்களில் பெரும் பிரச்னையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், தென்னிந்திய உணவு குறித்து பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார்.
கோவாவில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு கோவா கடற்கரை ரிசார்ட்களில் விற்கப்பட்ட இட்லி, சாம்பாரே காரணம் என அம்மாநில பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.
குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்:
வடக்கு கோவாவில் உள்ள கலங்குட்டில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக எம்எல்ஏ, "கோவாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு அரசை மட்டுமே பழி சொல்ல முடியாது. இதில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.
கோவா மக்கள் தங்கள் கடற்கரை குடில்களை மற்ற மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த சிலர் குடிசைகளில் 'வடை பாவ்' விற்கிறார்கள். சிலர் இட்லி-சாம்பார் விற்கிறார்கள். (அதனால்தான்) கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவாவில் சர்வதேச சுற்றுலா குறைந்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இங்கு கூச்சல், குழப்பம் நிலவுகிறது. கடலோரப் பகுதியில், வடக்கு கோவாவிலும் சரி தெற்கு கோவாவிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு பல காரணிகள் சொல்லப்படுகின்றன.
சில வெளிநாட்டினர் ஒவ்வொரு ஆண்டும் கோவாவுக்கு வருவார்கள். ஆனால், வெளிநாட்டிலிருந்து இளைய சுற்றுலாப் பயணிகள் கோவாவை விட்டு வெளியேறுகிறார்கள். போர் காரணமாக, ரஷிய மற்றும் உக்ரைன் சுற்றுலா பயணிகள் கோவாவுக்கு வருவதை நிறுத்திவிட்டனர். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவா வருவதை நிறுத்திவிட்டனர்" என்றார்.

