திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
Trichy Panjapur Bus Stand: நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கட்டுமான பணிகள் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Trichy Panjapur New Bus Stand: திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது. என்ன தெரியுங்களா? திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடக்கும் என்று தெரிய வந்துள்ளது.
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையமானது மாநகர பேருந்து நிறுத்துமிடம், தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம், லாரிகள் முனையம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதில் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுக்கும் என ரூ.900 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு முதல்கட்டமாக ரூ.460 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மிகவும் பிரம்மாண்டமாக அமைக்க திட்டமிட்டப்பட்டது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளை 349.98 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் கடந்த 2021 டிச.30ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து பணிகள் அனைத்தும் மிகவும் மும்முரமாக நடந்தது. இதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2022 ஜூன் 13ம் தேதி நிர்வாக அனுமதி வழங்கிய பின் பணிகள் அனைத்தும் சூடுபிடித்தன. இந்த பேருந்து முனைய பணிகள் தற்போது 93 சதவீதம் முடிந்துள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வரும் போது சுமார் 2 லட்சம் மக்களை எளிதாக கையாளும் அளவிற்கு மிக தரமானதாகவும், பெரிதாகவும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கட்டுமான பணிகள் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் எந்தெந்த இலாக்காவில் பணிகள் மீதம் இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் அப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே பிப்ரவரி மாதம் முடிக்க வேண்டிய பணிகள் ஏப்ரல் மாதத்திலாவது முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். துறை அதிகாரிகளிடம் பேருந்து இயக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கான்டிராக்டர்களிடமும் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மார்ச் மாதம் 31ம் தேதி இந்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளேன். ஆம்னிபேருந்து நிலையம் கட்டப்படும் வரை தற்போது செயல்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படும். டவுன் பஸ் முழுவதும் அங்கு இருந்து இயக்கப்படும். மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது தொடர்ந்து மும்மொழிக் கொள்கையில் திமுகவும், பாஜகவும் நாடகமாடுகிறது என்ற தவெக தலைவர் விஜய் கூறியிருக்கிறாரே என்ற கேள்வி கேட்கப்பட்டபோது அவர் என்று சொல்லியவர் வார்த்தையை முடிக்காமல் வேண்டாம் என கூறிவிட்டு புறப்பட்டு சென்று விட்டார். திருச்சி மக்களின் வெகுவான எதிர்பார்ப்பாக இருந்த பஞ்சப்பூர் பேருந்து முனையம் மார்ச் இறுதியில் திறக்கப்படும் என்று உறுதியாக தெரிய வந்துள்ளது.
ALSO READ | Trichy Tidel Park: வேற லெவல் ஆகப்போகும் திருச்சி... 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை.. ரெடியா இருங்க..!





















