தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தொகுதி மறுசீரமைப்புக்கு தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் ஒரு தொகுதியை கூட இழக்காது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி அளித்த நிலையில், அதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா எதிர்வினையாற்றியுள்ளார். அமித் ஷா சொல்வதை நம்ப முடியாது என்றும் தென் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சித்தராமையா விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து சித்தராமையா களத்தில் குதித்துள்ளார்.
தென் மாநிலங்களுக்கு ஆபத்து?
தொகுதி மறுசீரமைப்புக்கு தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தென் மாநிலங்களின் தலைமைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, விகிதாச்சார அடிப்படையில், எந்த தென் மாநிலத்திலும் ஒரு இடம் கூட குறைக்கப்படாது" என வாக்குறுதி அளித்தார்.
களத்தில் குதித்த சித்தராமையா:
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். அமித் ஷா சொல்வதை நம்ப முடியாது என்றும் தென் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சித்தராமையா விரிவாக பேசுகையில், "இதுபற்றி அவரிடம் சரியான தகவல் இல்லை என தோன்றுகிறது. அல்லது கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, மற்றும் ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதகம் விளைவுக்கும் நோக்கில் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என நினைக்கிறேன்.
வட மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போலல்லாமல், தென் மாநிலங்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குகின்றன. இதன் விளைவாக, சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். அல்லது அதே எண்ணிக்கையில் இருக்கும். அதே நேரத்தில் வட மாநிலங்கள் அதிக இடங்களைப் பெறும். எந்த சூழ்நிலையிலும் தென் மாநிலங்கள் இழப்பை சந்திக்கும். இது உள்துறை அமைச்சருக்கு தெரியாதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.




















