Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகையை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி 10க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அவர்கள் செல்வப்பெருந்தகை மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் பகீர் ரகங்களாக உள்ளது.
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பலருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் சிறிதும் உடன்பாடு இல்லை. என்ன காரணத்திற்காக, எதன் அடிப்படையில் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை கேட்டு போன் மேல் போன், கடிதமே மேல் கடிதம் டெல்லி தலைமைக்கு அடித்தாலும், அனுப்பினாலும் அங்கிருந்து நோ ரெஸ்பான்ஸ். இதானால், அதிருப்தி அடைந்த அவர்கள் வேறு வழியில்லாமல் செல்வப்பெருந்தகையை தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படத் தொடங்கினர்.
ஆனால், மாநில தலைவரான பின்னர் செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகள் மாறிப் போனதாகவும் தான் நினைப்பது மட்டுமே கட்சியில் நடக்க வேண்டும் என்றும், எந்த ஒரு விவகாரத்திற்கு யாரையும் கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பதும் அவர்களை கோபத்திற்கு உள்ளாக்கியது. செல்வப்பெருந்தகை மீது அவர் காங்கிரஸ் கட்சிக்கு வருவதற்கு மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து போன்ற வேலைகளில் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்ற புகாரும் இருப்பதால், பாரம்பரியமான காந்தியவாத கட்சியை கட்டப்பஞ்சாயத்து செய்தவர் எப்படி வழிநடத்த முடியும் ? என்ற கேள்வியும் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. தொடர்ந்து இவர் தலைவராகவே இருந்தால் காங்கிரஸ் கமிட்டி கட்டப்பஞ்சாயத்து கமிட்டியாக மாறிவிடுமோ என்ற அச்சம் பல சீனியர்களுக்கு இருக்கிறது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
இந்நிலையில், செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் கமிட்டியில் இருந்து நீக்க வலியுறுத்தி ராகுல், கார்க்கே, பிரியங்கா உள்ளிட்டோரை சந்திக்க ஒரு படையே தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி டெல்லிச் சென்றிருக்கிறது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மயூரா ஜெயக்குமார் ஆகியோரின் ஆதரவு மாவட்ட தலைவர்கள் செல்வப்பெருந்தகையை நீக்கக்கோரி போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரவியம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் செங்கம் குமார், வேலூர் மாவட்டத் தலைவர் டீக்காராம், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஒருவார காலமாக டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கேவின் ஆதரவு செல்வப்பெருந்தகைக்கு இருப்பதால், மாவட்ட தலைவர்களை சந்திக்க தொடர்ந்து மல்லிகார்ஜூனா கார்க்கே மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
நூற்றுக்கணக்கான புகார்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டாலும் செல்வப்பெருந்தகை மீது ஏன் மல்லிகார்ஜூனா கரிசனம் காட்டுகிறார் என்று காங்கிரஸ் முக்கிய வட்டாரத்தில் விசாரித்தப்போது ‘தான் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும்போதே பட்டியலினத்தை சேர்ந்தவர்களை இந்தியா முழுவதும் முக்கியத்துவம் வகிக்கும் பொறுப்புகளில் காங்கிரஸ் கட்சியில் அமர்த்திவிட வேண்டும் என்று கார்க்கே நினைப்பதாகவும், அதன் காரணமாகவே செல்வப்பெருந்தகை மீது புகார் சென்றாலும் அவர் அதனை கண்டுக்கொள்வதில்லை என்று கூறினர்’ அதே நேரத்தில் மற்றொரு தரப்பில் விசாரித்தப்போது, மல்லிகார்ஜூனா கார்கேவின் மகன் சென்னைக்கு வந்தப்போது அவருக்கு எல்லா விதமான உதவிகளை செய்துக்கொடுத்து அவரது குட் புக்கில் இடம்பெற்றதால், அவரைத் தாண்டி செல்வப் பெருந்தகையை ஒன்றும் செய்யமுடியவில்லை என்றும் தெரிவித்தனர்’





















