(Source: ECI/ABP News/ABP Majha)
சேலத்தில் ரூ.70 கோடி மதிப்பிலான விவசாய நிலத்தை முறைகேடாக ஏலம் பெற்ற தனியார் வங்கி
தென்னை மரங்கள், விதை நெல் நாற்றுகள், மாட்டு தீவனங்கள் உள்ளிட்டவைகள் அழிப்பு.
சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டல குழு தலைவர் மோகன். இவர் தற்போது அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றினை அளித்தார். அதில், ‘நான் ஒரு தனியார் வங்கியில் தனக்கு சொந்தமான கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள சுமார் மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை அடமானமாக வைத்து ரூ.12.5 கோடி கடன் வாங்கினேன். அதற்கான கடன் தொகையை செலுத்தி வந்த நிலையில் திடீரென அந்த வங்கி ரூபாய் 70 கோடி மதிப்பிலான சொத்தை, வெறும் ஒன்பது கோடிக்கு ஏலம் விட்டது. மேலும் அந்த நிலத்தில் உள்ள தென்னை மரங்களையும் ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தி மாட்டு தீவனங்கள், விதைநெல் நாற்றுகளையும் அழித்தனர்.
இதனை அறிந்த நான் அதனை தடுக்க முயன்றேன். அப்போது வாகனங்களில் வந்த ரவுடிகள், வங்கி அலுவலர்கள் மற்றும் அன்னதானப்பட்டி காவல்துறையினர் வைத்து என்னை அப்புறப்படுத்தினர். அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் உள்ள அறையில் 5 மணி நேரம் அடைத்து வைத்தனர். இந்த நில ஏலம் தொடர்பாக எனக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. வங்கியும் காவல்துறை இணைந்து அராஜக செயலில் ஈடுபட்டு எனது சொத்தை பறித்துள்ளது. இதற்காக பல லட்சம் பணம் காவல்துறைக்கு கைமாறி உள்ளதாகவும் கருதுகிறேன். வங்கி நிர்வாகம் பெரு மதிப்புமிக்க சொத்தை குறைந்த விலைக்கு பெற்று, மறைமுக கொள்ளை லாபம் அடைய காவல்துறை துணை போவதையும், வருவாய் துறையின் ஆவணங்களுக்கு எதிராகவும் வாடகைதாரர், குத்தகைதாரர் சட்டங்களுக்கு எதிராகவும் செயல்பட்டு எனது மனித உரிமையை, சொத்துரிமையை எனக்கு வழங்க மறுத்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எனது சொத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்