TVK Alliance | ”அதிமுகவுடன் கூட்டணி இல்லை” விஜய் உருவாக்கும் மாற்று அணி! ஆதவ் போட்ட ஸ்கெட்ச்!
அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜகவுடன் எப்போதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தவெக கூறிவரும் நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவுடனும் கூட்டணி இல்லை என்று தவெக அறிவித்தது. இச்சூழலில், யாரோடு மாற்று அணிக்கு விஜய் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, சீமான் உள்பட பல்வேறு கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜயும் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை வலுப்படுத்தி வருகிறார். அதன்படி, கட்சி ரீதியிலான 120 மாவட்டச் செயலாளர்களை நியமித்தது, 70,000 ஆயிரம் பூத் ஏஜண்டுகள் நியமனம், சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முகாம் என்று விஜய் கட்சி வேலைகளை தீவிரம் காட்டி வருகிறார்.
முன்னதாக திமுக தற்போது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியுடனே தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், தங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது என்றும் சொல்லி வருகிறது. அதேபோல், பாஜக உடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்திக்க உள்ளது. NDA கூட்டணியில் பாமக இருந்தாலும் அது அழுத்தமாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தவெக போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட சூழலில், பாஜக உடனான கூட்டணியில் தவெக அதை கை விட்டதாகவும் சொல்கின்றனர். ஒருவேளை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி வந்தால் இபிஎஸ்-உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற விருப்பமும் விஜய்-க்கு இருப்பதாக சொல்கின்றனர். இச்சூழலில் தான் விஜய் யாரோடு கூட்டணி அமைப்பார், மாற்று அணிக்கு விஜய் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது திமுக - பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் விஜய், காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான போக்கையே கடைபிடித்து வருவதாகவும் அவர்களுடன் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் புதிதாக கட்சி தொடங்கிய விஜய் உடன் எப்படி இணைவார்கள் என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் அக்கட்சியின் தலைவர்களான திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் ஆட்சி அதிகாரம் குறித்தும் கூட்டணி மாற்றம் குறித்தும் சில கருத்துக்களை அண்மையில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முன்வைத்தாக கூறப்பட்டது. இதனை பயன்படுத்தி எப்படியும் காங்கிரஸை தங்கள் கூட்டணியில் இணைத்துவிட வேண்டும் என்று விஜய் முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனும் விஜய் பேசி வருவதாகவும், இந்த கட்சிகளை எல்லாம் இணைத்து திமுக - அதிமுக விற்கு எதிராக ஒரு மாற்று அணியை விஜய் உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.




















