தூதுவிடும் திமுக, அதிமுக தலைகள்! கண்டிஷன் போடும் விஜய்! விஸ்வாசம் தான் முக்கியம்
காளியம்மாள், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் தவெகவுக்குள் நுழைய தூண்டில் போட்டு வரும் நிலையில், மாற்றுக் கட்சியினரை தவெகவில் சேர்க்க விஜய் தயக்கம் காட்டுவதாக சொல்கின்றனர். இதன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
2026 தேர்தலை குறிவைத்து பூத் கமிட்டி அமைப்பது, பாதயாத்திரைப் என அடுத்தடுத்து பணிகளில் வேகம் காட்டி வருகிறார் தவெக தலைவர் விஜய். முதல்முறையாக தேர்தலை சந்திப்பதால் விஜய்யிடன் பல கேள்விகள் இருப்பதாகவும், அதனால் ஒவ்வொரு அடியையும் பார்த்து வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாக சொல்கின்றனர். விஜய் கட்சி ஆரம்பித்ததுமே மற்ற கட்சிகளில் இருக்கும் முக்கிய புள்ளிகள் தவெக பக்கம் தாவி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விசிகவில் இருந்து ஆதர் அர்ஜூனா, அதிமுகவில் இருந்து சிடிஆர் நிர்மல் குமார் வந்த பிறகு மீண்டும் சைலண்ட் மோடுக்கு சென்றது தவெக.
மாஃபா பாண்டியராஜன், காளியம்மாள், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கெல்லாம் விஜய் தான் பிடி கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக சொல்கின்றனர். கட்சியில் பரீட்சயமான முகங்கள் இருப்பதை விட விசுவாசமானவர்கள் இருக்க வேண்டும் என்பதே விஜய்யின் நினைப்பாக இருப்பதாக தெரிகிறது. யார் கட்சிக்கு வந்தாலும் போஸ்டர் ஒட்டிய தொண்டனுக்கு தான் பதவி என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதையும் இதன் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது.
மாற்று கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பதவி கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். ஏறக்னவே மாவட்ட செயலாளர்களை அறிவித்து விட்டாலும், இளைஞரணி, மகளிர் அணி என பொறுப்புகளை பிரிக்க வேண்டியுள்ளதால் அதில் தவெக விசுவாசிகள் மட்டுமே இருக்க வேண்டும் என விஜய் சொல்லி வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் மாற்று கட்சியில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு கேட்பார்கள். அவர்களிடம் பொறுப்பை தூக்கி கொடுத்துவிட்டால் தனக்காக இத்தனை ஆண்டுகளாக உழைத்தவர்கள் அதிருப்தி அடைந்தால் முதல் தேர்தலிலேயே முற்றிலும் கோணலாக போய்விடுமோ என்ற குழப்பம் விஜய்க்கு இருப்பதாக சொல்கின்றனர்.
மற்றொரு பக்கம் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் MLA ஆன பிறகு மீண்டும் கட்சி தாவி விடுவார்களோ என்ற பயத்தில் முதல் தேர்தலிலேயே இதையெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம் என விஜய் கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.
ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் பொருளாதார ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ கட்சிக்கு ஆதாயமாக இருப்பார்கள் என்பதால் விஜய் அவர்களை தேர்ந்தெடுத்ததாக தெரிகிறது. இதுபோல் கட்சிக்கு பலமாகவும், விசுவாசமாகவும் குறிப்பாக கட்சியை விட்டே போனாலும் தலைமை மீது புகார் அடுக்காதவர்களை தான் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கண்டிஷன்களை விஜய் போட்டுள்ளதாக தவெக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.





















