Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
சென்னையில், தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் என்ன கூறினார் என்பதை பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியில், 2 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து செய்திகாளர்களை சந்தித்த மேயர் பிரியா, தூய்மைப் பணியாளர்கள் பணியில் சேர ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கெடு விதிப்பு உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகள் குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள்
சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 ஆகியவற்றில், தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு பகல் பாராமல் போராடும் அவர்களுக்கு, அதிமுக, தவெக, பாஜக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களுடன், 8-ம் கட்டமாக, இன்று அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என். நேரு, மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார்.
“ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கெடு“
அப்போது பேசிய பிரியா, பேச்சுவார்த்தையின்போது, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்ததாகவும், அவர்களுக்கு பணி பாதுகாப்பு எப்போதுமே உண்டு என்பதை எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும், இது குறித்த வழக்கில், நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், ரிப்பன் மாளிகை போராடுவதற்கான களமல்ல என்று நீதிமன்றம் தெவித்துள்ளதாகவும், அதனால், அங்கு போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் மேயர் பிரியா தெரிவித்தார்.
அதோடு, போராட்டம் நடத்துவதற்கென்று மாநகராட்சியில் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சென்று அவர்கள் போராட்டம் நடத்தலாம் என்றும் கூறினார். மேலும், தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில்தான் செயல்படும் என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் அந்த நிறுவனம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அதனால், முன் எப்போதும் இல்லாத அளவில் பணியில் பாதுகாப்பு இருப்பதாகவும், அதோடு சேர்த்து, தற்போது இல்லாத வகையில், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய சலுகைகளும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைக்கும் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.
அதனால், தூய்மைப் பணியாளர்கள் அந்த பணியில் சேர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து உடனடியாக ஒரே நாளில் முடிவெடுக்க முடியாது என்றும், அவர்கள் பணியில் சேர்ந்த உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கலாம் எனவும் மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.





















