Rahul To Modi: ”நரம்புல குங்குமம் ஓட்றது இருக்கட்டும்” - மோடிக்கு ராகுல் கேட்ட நச் கேள்விகள் - பதில் வருமா?
Rahul To Modi: ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 3 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Rahul To Modi: வெற்று பேச்சுகளை நிறுத்துங்கள் என பிரதமர் மோடிக்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி:
பஹல்காமில் நடந்த தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பதில் அளிக்கும் அரசின் எந்தவொரு முடிவுக்கும், துணைநிற்போம் என ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் உறுதி அளித்தன. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இதனிடையே, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றமும் வெடித்தது. ஆனால், தீவிரவாதம் மற்றும் பஹல்காம் தாக்குதல் தொடர்பான எந்தவொரு திட்டவட்டமான முடிவும் எட்டப்படாமல், தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதாக இருநாடுகளும் அறிவித்தன. இதனை தொடர்ந்து, மத்திய அரசை நோக்கி ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். அந்த வகையில் அண்மையில் ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசியதை குறிப்பிட்டு, “வெறும் வெற்று பேச்சுகளை வழங்குவதை நிறுத்திவிட்டு, எனது கேள்விகளுக்கு பதிலளியுங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.
मोदी जी, खोखले भाषण देना बंद कीजिए।
— Rahul Gandhi (@RahulGandhi) May 22, 2025
सिर्फ इतना बताइए:
1. आतंकवाद पर आपने पाकिस्तान की बात पर भरोसा क्यों किया?
2. ट्रंप के सामने झुककर आपने भारत के हितों की कुर्बानी क्यों दी?
3. आपका ख़ून सिर्फ़ कैमरों के सामने ही क्यों गरम होता है?
आपने भारत के सम्मान से समझौता कर लिया! pic.twitter.com/HhjqbjDsaB
ராகுல் காந்தியின் 3 கேள்விகள்:
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “
1. தீவிரவாதம் தொடர்பான பாகிஸ்தானின் கருத்தை ஏன் நீங்கள் நம்பினீர்கள்?
2. டிரம்பிற்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?
3. கேமராக்கள் முன்னிலையில் மட்டும் உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்? நீங்கள் இந்தியாவின் கவுரவத்தை சமரசம் செய்துவிட்டீர்கள்” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, எம்பிக்களின் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது மத்திய அரசின் மாபெரும் திசை திருப்பும் முயற்சி என காங்கிரஸ் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதோடு, பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தற்போது வரை கைது செய்யப்படாதது ஏன் என்பதும் காங்கிரஸின் முக்கிய கேள்வியாக உள்ளது.
”தோட்டாவாக மாறிய குங்குமம்”
ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு பிரதமர் மோடி பங்கேற்ற முதல் பொதுநிகழ்ச்சி ராஜஸ்தானில் நடைபெற்றது. அதில் பேசும்போது, “9 மிகப்பெரிய தீவிரவாத முகாம்களை நாம் வெறும் 22 நிமிடங்களில் அழித்தோம். இந்திய மகளிர்களின் புனிதமான குங்குமம் தோட்டாக்களாக மாறினால் என்ன நடக்கும் என்பதை உலகமும், எதிரிநாடுகளும் கண்டுள்ளன. குங்குமத்தை அழிக்க நினைத்தவர்களை நாம் தூசாக்கியுள்ளோம். எதிரிநாட்டை மண்டியிட செய்யும் வகையிலான நமது ராணுவத்தின் செயல்பாடுகளை பாராட்டுகிறேன்.
”ரத்தம் இல்லை, குங்குமம் தான் ஓடுகிறது”
இந்தியாவுடன் நேரடியாக மோதி வெற்றி பெற முடியாது என உணர்ந்ததன் விளைவாகவே, தீவிரவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. சுதந்திரம் அடைந்தது முதலே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாகிதான், தீவிரவாதத்தை பரப்பி அப்பாவி மக்களை கொன்று வருகிறது. இதனால் இந்தியாவில் அச்சத்தை பரப்பவும் முயல்கிறது. ஆனால், பாகிஸ்தான் ஒன்றை மறந்துவிட்டது. இந்திய தாயின் சேவகன் மோடி இங்கே உறுதியாக நிற்கிறேன். மோடியின் மனம் அமைதியாக இருக்கிறது. ஆனால் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடுவதில்லை. சூடான புனிதமான குங்குமம் தான் ஓடுகிறது” என பிரதமர் மோடி ஆவேசமாக பேசியிருந்தார்.





















