O. Panneerselvam Update : ’அரசு வீட்டை காலி செய்த ஓபிஎஸ்’ தி.நகர் சென்றார்…!
முதல்வராக இருந்தபோதும், துணை முதல்வராக பதவி வகித்தபோதும், நிதி அமைச்சராக பணியாற்றியபோதும், தான் தங்கியிருந்த அரசு இல்லமான கிரின்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை இல்லத்தை செய்தார் ஓபிஎஸ்
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அனைவரும், காலிசெய்து சென்றுவிட்ட நிலையில், துணை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்-சும் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ‘தென்பெண்ணை’ வீட்டை காலி செய்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இப்போது இருக்கும் அரசு வீட்டிலேயே இருக்கலாம் என திமுக அரசு அனுமதி வழங்கியிருக்கும் நிலையில், ஓபிஎஸ் மட்டும் வீட்டை காலி செய்து, ஆழ்வார்ப்பேட்டை அருகே இருக்கும் வீனஸ் காலனியில் உள்ள வாடகை வீட்டிற்கு குடிபெயர்கிறார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு, பின்னர் முதல்வராக ஆக்க முயற்சி செய்யப்பட்டு வந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் இரவில் சென்று அமர்ந்து, தர்மயுத்தம் செய்து சசிலாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், முதல்வர், அமைச்சர் பதவிகள் அப்போது ஓபிஎஸ்-சிடம் இருந்து பறிக்கப்பட்டன. அதனால், அவர் தங்கியிருந்த அரசு இல்லமான தென்பெண்ணை வீட்டை காலி செய்யச் சொல்லி நிர்பந்தம் எழுந்து, பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீசும் வழங்கி உடனே காலி செய்யவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அதனால், கிரின்வேஸ் இல்லத்தில் இருந்து காலி செய்த ஓபிஎஸ், பல இடங்களில் வீடு பார்த்தும் அவை திருப்தி அளிக்காததால், கடைசியாக ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டை தேர்வு செய்து, அதில் பால்காய்ச்சி அங்கு குடியேறினார். அதன்பின்னர், தனது தர்மயுத்த பொதுக்கூட்டங்களுக்கெல்லாம் அங்கிருந்தே சென்ற ஒபிஎஸ், ஈபிஎஸ் அணியிடையே சமரசம் ஏற்பட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தபிறகு, ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அதனால், மீண்டும் வீனஸ் காலனி இல்லத்தில் இருந்து, அரசு இல்லமான தென்பெண்ணை வீட்டிற்கே வந்தார். நிதித்துறை அமைச்சராக, முதல்வராக, துணை முதல்வராக இருந்தபோதெல்லாம் இதே தென்பெண்ணை வீட்டிலேயே தொடர்ந்து தங்கியிருந்த ஒபிஎஸ், இந்த இல்லம் தனக்கு மிகுந்த ராசியானது என நெருக்கமான நண்பர்களிடம் சொல்லி வந்தார். இந்நிலையில், ஆட்சியையும் இழந்து, எதிர்க்கட்சி தலைவராகவும் ஆக முடியாததால் மீண்டும் அரசு இல்லமான தென்பெண்ணை வீட்டை காலி செய்துவிட்டு, இந்த முறை தி.நகர் நோக்கி பயணப்பட்டிருக்கிறார் ஒபிஎஸ். மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் தொடங்கி, தேனியில் நடைபெறும் அரசு ஆலோசனை கூட்டங்கள் வரை அனைத்திலும் ஒபிஎஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒபிஎஸ்-சும் திமுகவினரிடையே சுமூகமாக நடந்து வரும் சூழலில் அவர் எதிக்கட்சித் தலைவர் ஆகியிருந்தால் அல்லது எதிக்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தால் கூட, அவரையும் இந்த இல்லத்திலேயே தங்கியிருக்க அரசு உத்தரவிட்டிருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் தனது ராசியான தென்பெண்ணை வீட்டை ஓபிஎஸ்க்கு காலி செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார். ஓபிஎஸ் ராசியான வீடு என்று நினைக்கும் அந்த இல்லம், தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அங்கு குடியேறவிருக்கிறார் அன்பில் மகேஷ்