EPS on Vijay: “திமுகவை வீழ்த்த விஜய் அதிமுக உடன் இணைவார்“ - எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
திமுக வீழ்த்துவதற்காக, விஜய் அதிமுக உடன் இணைவார் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவரது நம்பிக்கை பலிக்குமா.?

2026 தேர்தலில், கூட்டணி என்பது ஒரு முக்கியமான விஷயமான உள்ளது. ஏற்கனவே பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை கூட்டணிகளை அறிவித்தாலும், அது இன்னும் முழுமையடையவில்லை. எந்த நேரமும் எதுவும் மாறலாம் என்ற சூழலே உள்ளது. ஏற்கனவே, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு அதிமுக விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில் பிரபல தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக வீழ்த்துவதற்காக, விஜய் தங்கள் கூட்டணியில் இணைவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் என்ன கூறியானர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
“திமுகவிற்கு எதிரானவர்கள் நிச்சயம் கூட்டணியில் இணைவார்கள்“
சென்னையில், தனியார் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த அதிமுக பொதச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஒத்த கருத்துடைய, அதாவது, திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்று நினைக்கும் விஜய்யின் தவெக, நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோர், அதிமுக உடன் கைகோர்க்க வேண்டும் என்று அவர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
விஜய், சீமான் போன்றோர், வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை பதவியை விட்டு இறக்க வேண்டும் என்ற ஒன்றை குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் தங்களுடன் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
“விஜய் அதிமுக உடன் இணைவார் என நம்புகிறேன்“
மேலும், பாஜக உடன் அதிமுக இணைந்ததை எதிர்க்கும் விஜய், என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தான் கடவுளை நம்புபவன் என்றும், அதனால் அது நடக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
திமுகவிற்கு எதிராக ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்க, அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“கூட்டணி ஆட்சி சர்ச்சை ஊடகங்கள் உருவாக்கியது“
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி ஆட்சி குறித்த சர்ச்சைக்கு பதிலளித்தார். அப்போது, தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிப்பதாகவும், வெற்றி பெற்றால் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
கூட்டணி ஆட்சி சர்ச்சை ஊடகங்களால் உருவாக்கப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், பாஜகவிற்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி, மக்கள் மனதில் பாஜகவிற்கு எதிரான மனநிலையை உருவாக்கியது திமுக தான் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், மாநிலத்தில் பாஜக மீது பரவலான வெற்று ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
அதிமுக உடன் அமமுக இணைவது குறித்து என்ன கூறினார்.?
இந்த பேட்டியின்போது, அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி இணைவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதற்கு காலம் தான் பதில் சொல்லும் என தெரிவித்தார்.
இதனால், ஒருவேளை அமமுகவை அவர் சேர்த்துக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
“ஓ. பன்னீர்செல்வத்திற்கு நோ“
அதே வேளையில், ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் மீண்டும் இணைவது குறித்த கேள்விக்கு, அது ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார். மேலும், அவர் இன்னமும் அதிமுகவிற்கு எதிராகவே சண்டையிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே விடுத்த அழைப்பை, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை நிராகரித்துவிட்ட நிலையில், தற்போது அவர்கள் இணைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால், பாஜக-விற்கு எதிரான மனநிலையில் இருக்கும் தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், பாஜக இருக்கும் அதிமுக கூட்டணியில் இணைவார்களா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறுவார்கள். அதுபோல், எடப்பாடி பழனிசாமி நம்பும் கூட்டணி அமைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





















