(Source: ECI | ABP NEWS)
MK Stalin Photo : ’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
’முதல்வர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று கட்சியினர் பொதுமக்கள் உள்ளிட்டோரும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்’

தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக தொடர் சிகிச்சையில் இருக்கிறார். தினந்தோறும் தலைமைச் செயலகம், அறிவாலயம், சுற்றுப் பயணம் என சுற்றிச் சுழன்றுக் கொண்டிருந்த அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனையிலும் மக்கள் பணி
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாலும் மக்கள் நலத் திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இன்று மருத்துவமனையில் இருந்தே முதல்வர் மக்கள் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். தலைமைச் செயலாளர் முருகானந்தம், தனிச் செயலாளர் உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகளோடு மருத்துவமனையில் அமர்ந்தபடி காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் மற்று மக்களுடன் நேரடியாக உரையாடியுள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
மருத்துவமனையில் இருந்தபடியே மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#ApolloHospital #UngaludanStalin #MKStalin #DMK #Tamilnadu #tamilnews #ABPNadu pic.twitter.com/4UhwDsuSoZ
— ABP Nadu (@abpnadu) July 23, 2025
கையில் பேண்டேஜ் – கலங்க வைக்கும் புகைப்படம்
தலைச்சுற்றல் உள்ளிட்ட பிரச்னைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வரை கடந்த மூன்று நாட்களாக மக்கள் பார்க்கவில்லை. இன்று தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை முதல்வரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், உடலுக்கு தேவையான குளுக்கோஸ் உள்ளிட்டவற்றை ஏற்ற உதவியாக கையில் போடப்பட்டிருக்கும் வென்ஃப்லான் பேண்டேஜூடன் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவரது கையில் அந்த ஊசி போட்ட இடத்தில் வீக்கம் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்து இடுகிறார். இது பார்ப்போரை கலங்க செய்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பூரண உடல் நலன் பெற்று மீண்டும் வர வேண்டும் என கட்சியினரும் பொதுமக்களும் அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி உடையில் மிகுந்த கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் வழக்கமாக வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்திருப்பார், சில நேரங்களில் வெள்ளை சட்டையும் பேண்டும் அவருக்கு தோதாக அணிந்திருப்பார். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் முதல்வரின் புகைப்படத்தில் கைலி, கட்டம்போட்ட சட்டை, தோளில் துண்டுடன் அந்த புகைப்படத்தில் முதல்வர் காட்சியளிக்கிறார். இதுவும் காண்போரை கண்கலங்க செய்திருக்கிறது.





















