MK Stalin: மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள், இதை செய்தால் கண்டிப்பாக உரிமைத் தொகை கிடைக்கும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அவர் என்ன செய்யச் சொல்லியுள்ளார் தெரியுமா.?

சிதம்பரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகுதி இருந்தும் மகளிர உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், முகாம்களில் வந்த விண்ணப்பித்தால், உரிமைத் தொகை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
“முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு உரிமைத் தொகை நிச்சயம்“
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு நடந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று சேவைகளை வழங்கவே, ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டத்தை தொடங்கியுள்ளதாக கூறியதோடு, இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களில் அனைவரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த முகாம்கள் மூலம், 46 சேவைகளுக்கு தீர்வு காணும் வகையில் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்த முதலமைச்சர், தகுதி இருந்தும் உரிமைத் தொகை கிடைக்காத மகளிர், இந்த முகாம்களில் வந்து விண்ணப்பித்தால், அவர்களுக்கு நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என கூறினார்.
முகாம்கள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறும் என்றும் அதனை தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“தமிழ்நாடு ஓரணியில் இருக்கும்போது, டெல்லி அணியின் காவித் திட்டம் பலிக்காது“
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திராவிட மாடல் அரசுக்கு துணையாக கூட்டணி கட்சியின் தலைவர்கள் இருப்பதாகவும், மார்க்ஸிய, அம்பேத்கர் இயக்க தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதுதான், ஓரணியில் தமிழ்நாடு என விளக்கமளித்தார்.
அதோடு, தமிழ்நாடு ஓரணியில் இங்கு இருக்கும்போது, எந்த டெல்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
எல்லாம் மாறும்.. மாற்றுவேன் - ஸ்டாலின்
திமுக அரசு, ஆதி திராவிட, பழங்கடியின மக்களுக்கு அதிக திட்டங்களை கொடுத்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், அரசின் சமூக சீர்திருத்த திட்டங்களுக்கு, கூட்டணி கட்சிகள் துணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு வரலாற்றிலேயே, பட்டியலின மக்களுக்கு அதிக திட்டங்களை திமுக அரசு வழங்கியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
சமூக நீதிப் பயணம் என்பது நீண்ட நெடியது என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதற்கு காலம் தேவைப்படும் என்றும், “எல்லாம் மாறும்.. மாற்றுவேன்“ என உறுதி அளித்தார்.





















