DMK General Body Meeting : துணைப் பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி? 9-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்..
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் வரும் 9-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ தி.மு.க.வின் 15வது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் 9-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி லிங்க்ஸ் கன்வென்ஷசன் சென்டரில் நடைபெறும்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
"தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது"
— DMK (@arivalayam) September 28, 2022
- கழக பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிவிப்பு.#DMK pic.twitter.com/otkQ8Lktce
வழக்கமாக, தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். ஆனால், இந்த முறை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராக உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி, இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளார் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தலைவராக மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் இருக்கின்றனர். இதில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால், எந்தவித போட்டியின்றி இவர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். சமீபத்தில் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகியதுடன், அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பதிலாக புதிய துணைப் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பதால், அந்த பதவிக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகிய மூன்று பேரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் கனிமொழியே தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் வழக்கத்திற்கு மாறாக செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுவதாலும், தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்பை இந்த பொதுக்குழு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Su Venkatesan : ரயில்வே வேலை "இந்தியா"க்காரங்களுக்கா...? "இந்தி"க்காரங்களுக்கா..? கடுப்பான சு.வெங்கடேசன் எம்.பி.
மேலும் படிக்க : Anbil Mahesh Poyyamozhi:அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் உறுதி