சென்னையில் தான் என் உயிர் பிரிய வேண்டும்.. எம்ஜிஆர் இல்லைனா இந்த சரோஜா தேவி இல்லை
மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி சென்னையில் இருந்த நினைவுகளை பகிர்ந்திருப்பது வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை சரோஜா தேவி ஒருமுறை சென்னையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது தனது சினிமா அனுபவம் குறித்தும் நடிகர் சிவகுமார் மற்றும் எம்ஜிஆர் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். மேலும், ஆதவன் படத்தில் சூர்யாவுடன் நடித்ததை மறக்க முடியாது என்பது கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்டம்
2016ல் நான் எனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாட விரும்பினேன். அதற்கு உதவியாக நடிகர் சிவகுமார், இயக்குநர் மனோபாலா, குட்டி பத்மினி, ரமணா, உதயா, ஹேமசந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை சரோஜா தேவி, நான் நடிகர் சிவக்குமாரிடம் தான் சென்னையில் பிறந்தநாள் கொண்டாடுவதும் குறித்தும் நிதி உதவி வழங்குவது குறித்தும் தெரிவித்தேன். அவர் எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறி எனக்கு எந்த வேலையும் அவர் வைக்கவில்லை. மற்றவருக்கு உதவி செய்யும் வகையில் இறைவன் எனக்கும் எல்லாம் கொடுத்திருக்காரு என சரோஜா தேவி தெரிவித்தார்.
சென்னையில் உயிர் பிரிய வேண்டும்
நான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் சென்னை தான் எனக்கு புகுந்த வீடு. சென்னையில் தான் எனது உயிர் பிரிய வேண்டும் என்று எப்போதும் இறைவனிடம் வேண்டுவேன். அந்த அளவிற்கு சென்னை எனக்கு மிகவும் பிடித்த ஊர். என்னை இங்குள்ள மக்கள் அவர்களது வீட்டில் உள்ளவரை போன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். அதேபோன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆரை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. நாடோடி மன்னன் படம் எனக்கு தமிழில் முதல் படம். அந்த படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து கலர் படமாக மாற்றினார். இதில் நான் அறிமுக நடிகை. அனைவருக்கும் என்னை தெரிய வேண்டும் என்பதற்காக அப்படி செய்தார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என சரோஜா தேவி கூறியுள்ளார்.
தெய்வம் வாழும் வீடு
எம்ஜிஆர் எனக்கு நிறைய விசயங்களை கற்றுக் கொடுத்தார். அவருடன் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஒருவரிடம் எப்படி பேச வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவரிடம் இருந்தே தெரிந்துகொண்டேன். சென்னையில் உள்ள ராமாபுரம் தோட்டத்தை பார்க்கும் போதெல்லாம் வருத்தமாக இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைவரும் அவரை தெய்வம் என்று போற்றி மதிக்கிறார்கள். நானும் ராமாபுரத்திற்கு சென்று பலமுறை உணவு சாப்பிட்டிருக்கிறேன். எனவே அவரை நீங்கள் எல்லோரும் தெய்வம் என்று கூறி நிறுத்தி விடாதீர்கள். அது தெய்வம் வாழும் வீடாக புனிதமாக போற்றி மதிக்க வேண்டும். அவர் இல்லை என்றால் இந்த சரோஜா தேவி இல்லை. அவர் மூலம் வந்தவர் தான் சரோஜா தேவி. எம்ஜிஆரை போன்று நடிகர் சிவாஜி கணேசனிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் சிறந்த நண்பராகவும் இருந்திருக்கிறார் என சரோஜா தேவி தெரிவித்துள்ளார்.
சூர்யா நல்ல பையன்
ஆதவன் படத்தில் நடித்த போது சிவகுமாரின் பையன் சூர்யா என்னை நல்லவிதமாக கவனித்துக்காெண்டார். அப்படியே சிவகுமாரின் குணம் இருக்கிறது. நான் சென்னைக்கு வந்திருக்கிறேன் தெரிந்தால் அனைவரும் கூடி விடுவார்கள். அதை பார்ப்பதற்காகவே சென்னை வர பிடிக்கும் என மகிழ்ச்சியுடன் சரோஜா தேவி தெரிவித்தார்.





















