Anbil Mahesh Poyyamozhi:அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் உறுதி
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அவருக்கு திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் உறுதியானது. இத்தகவலை முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் 2 நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று (செப்.27) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, காய்ச்சல் காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
— Priya Gurunathan (@priyaGurunathan) September 27, 2022
இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை....#AnbilMahesh
சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அவருக்கு திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை, ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் பரவி வந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாகவும் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்திருந்தார்.
2 வாரங்களாக பரவும் காய்ச்சல்
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக ஃப்ளூ காய்ச்சல் பரவி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளிக்குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு ஆளான நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பதிலளித்த அவர், ''இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தனித்து முடிவெடுக்க முடியாது. முதலமைச்சர், பொது சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய முடிவெடுப்பார்.
வழக்கமாக சுகாதார நெருக்கடி காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் அலுவலகத்தில் சுகாதாரத் துறையுடன் இணைந்து கூட்டம் நடைபெறும். அதில், ‘முகக் கவசம் அணிய வேண்டும். அருகருகில் அமராமல், இடைவெளி விட்டு அமர வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். விடுமுறை அளிக்கலாம்’ என்றெல்லாம் ஆலோசனைகள் அளிப்பர்.
இவற்றை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்த்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாக வெளியிடும். இந்த நிலையில் தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்து, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து என்ன அறிவுறுத்தல் வருகிறதோ, அதைப் பின்பற்றுவோம்.'' எனத் தெரிவித்திருந்தார்.