Loksabha Attendance: மக்களவை எம்.பி-க்கள் இனிமே டிமிக்கி கொடுக்க முடியாது.! ஹை டெக் வருகைப்பதிவு; அசத்தும் நாடாளுமன்றம்
இந்த மாதம் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரிலிருந்து, மக்களவை எம்.பி-க்களுக்கு, உயர் தொழில்நுட்ப முறையில் வருகைப்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில், தற்போது உள்ள நடைமுறையின்படி, வருகைப்பதிவு செய்வது கடினமாக உள்ளதால், இந்த மாதம் 21-ம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரிலிருந்து, மக்களவை எம்.பி-க்களின் வருகைப்பதிவை, அவர்கள் அமரும் இருக்கைகளிலிருந்தே மேற்கொள்ளலாம். இதற்காக உயர்தொழில்நுட்ப முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகைப்பதிவிற்காக சிரமப்படும் எம்.பி-க்கள்
நாடாளுமன்றத்தில், தற்போது உள்ள நடைமுறையின்படி, எம்.பி-க்கள் தங்கள் வருகைப்பதிவிற்காக, மக்களவைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். பல= எம்.பி-க்கள் காலை 11 மணிக்கு ஒரே நேரத்தில் வருவதால், அமர்வை தவறவிடாமல் இருப்பதற்காக, கையெழுத்திடாமலேயே உள்ளே சென்றுவிடும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் வருகைப்பதிவில் கையெழுத்திட முடியாமல் பல எம்.பி-க்கள் சிரமப்படுகின்றனர்.
கையெழுத்து போட்டுவிட்டு எஸ்கேப் ஆகும் எம்.பி-க்கள்
இப்படி சிரமப்படும் எம்.பி-க்கள் ஒருபுறம் என்றால், அங்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போடுவிட்டு, அப்படியே திரும்பிச் செல்லும் எம்.பி-க்களும் உள்ளார்களாம். அதாவது, வருகைப்பதிற்காக கையெழுத்து போட்டுவிட்டு, அன்றைய அமர்வுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, வெளி வேலைகளுக்கு சென்றுவிடுவதுதான் அது.
வருகைப் பதிவை மேற்கொள்ள புதிய அமைப்பு
இப்படிப்பட்ட சூழலில், வரும் 21-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளதாக, மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, உயர் தொழில்நுட்பம் மூலம், எம்.பி-க்கள் தற்போது சில செயல்முறைகள் மூலம் தங்கள் வருகைப்பதிவை செய்ய முடியும். இதற்காக, எம்.பி-க்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில், ஒரு மல்டி மாடல் சாதனம்(MMD) நிறுவப்பட்டுள்ளதாம். அதன் மூலம், எம்.பி-க்கள் இப்போது அமர்வின்போதே தங்கள் வருகைப்பதிவை குறிக்க முடியும்.
மேலும், இதற்காக 3 விருப்ப முறைகளும் உள்ளதாம். அதன்படி, அனைத்து எம்.பி-க்களும் இந்த MMD மூலம் தங்கள் வருகையை குறிப்பிட 3 விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
-
மல்டி மீடியா கார்டு (MMC), இதன் மூலம் வருகையைப் பதிவு செய்யலாம்.
-
ஒவ்வொரு எம்.பி.க்கும் ஒரு பின்(PIN) எண் வழங்கப்படும். அதை எம்.எம்.டி-யில் உள்ளிட்டு வருகைப் பதிவு செய்யலாம்.
-
பயோமெட்ரிக் - எம்.பி.க்கள் தங்கள் விரல்களை எம்.எம்.டி-யில் வைப்பதன் மூலம் தங்கள் வருகையைப் பதிவு செய்ய முடியும்.
மழைக்கால கூட்டத் தொடரில் 2 அமைப்புகளும் செயல்படும்
இந்த மாதம் தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரில், 2 அமைப்புகளுமே, அதாவது பதிவேட்டில் கையெழுத்திடும் முறை மற்றும் புதிய தொழில்நுட்ப முறையும் பராமரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் செயல்படுத்தப்படும் புதிய முறை குறித்த எம்.பி-க்களின் கருத்துக்களை பெற்ற பிறகு, குளிர்கால கூட்டத் தொடரிலிருந்து இந்த புதிய முறை முழுமையாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைக்கு, மக்களவையில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த புதிய தொழில்நுட்பம், மாநிலங்களவையிலும் செயல்படுத்தப்படுமா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.






















