தேனி: ஊராட்சிக்கு நிதியிழப்பு... ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் கடமையிலிருந்து தவறியதாகவும், ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாகவும் கூறி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சுருளிப்பட்டி ஊராட்சி. இதன் ஊராட்சி மன்ற தலைவராக நாகமணி வெங்கடேசன் என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நாகமணி வெங்கடேசன் பொறுப்பேற்றதிலிருந்து இவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் நிலவி வந்துள்ளது. மேலும் இவர் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வந்ததால் நாகமணி வெங்கடேசன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி விலக கோரி தொடர்ச்சியாக வார்டு உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். மேலும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் கொடுத்தது தொடர்பாகவும் உயர் அதிகாரிகள் ஊராட்சி மன்றத்தில் சிறப்பு தணிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த தணிக்கையில் ரூபாய் 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு உரிய அனுமதி பெறாமல் வளர்ச்சிப் பணிகளில் செலவு செய்தது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக அரசுக்கு நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தத் தொகையினை மீண்டும் ஊராட்சி மன்ற தலைவரே செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் அந்தத் தொகையை செலுத்தாததால் அவரது செக் பவர் பறிக்கப்பட்டது.
Cyclone Dana: தீவிர புயலாக மாறிய டாணா; 200 ரயில்கள் ரத்து! மூடப்படும் கொல்கத்தா விமான நிலையம்
செக் பவரை மீண்டும் பெறுவதற்காக தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் முயற்சி செய்து வந்த நிலையில் இன்னும் அவரின் பதவி காலம் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள சூழலில் தேனி மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்து அதனை வெளியிட்டார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது குடும்பத்தார் யாரும் வீட்டில் இல்லாமல் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. நேற்று காலை வரை ஊராட்சி மன்ற தலைவரை தொடர்பு கொள்ள முடியாததால் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு அரசாணையினை ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன் வீட்டின் முன்பாக கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் சென்று வீட்டின் முன்பு சுவரில் உத்தரவு ஆணையினை ஒட்டிச் சென்றனர்.
இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. நாளை, ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’
அதில் கடமையிலிருந்து தவறியதாகவும் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாகவும் அதன் காரணமாக பதவி நீக்கம் செய்யப்படுவதாக வாசகங்கள் அடங்கியிருந்தது. மேலும் அரசுக்கு இழப்பு செய்த தொக தொகையினை அரசுக்கு செலுத்துமாறு அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் ஊராட்சி மன்ற தலைவர் மீது எழுந்து வந்த சூழலில் தற்போது அவர் பதவி நீக்கம் செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலர் சந்திரசேகர் என்பவர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.