'மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ’ யாருடன் உரையாடினார் பாருங்கள்..!

சென்னை அப்பலோ மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். 3 நாட்களாக அவர் மக்களிடையே தோன்றாத நிலையில் இந்த வீடியோ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக அரசின் செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
செய்தி துறை அறிக்கை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
“உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (23.7.2025) காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.அழகு மீனா, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப., ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும். முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, இதுவரை அம்மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டறிந்தார்
அத்துடன் “உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனுக்கள் அளிக்க வருகை தந்த பயனாளிகளிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி வாயிலாக கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
“உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், அரசு தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., அவர்களிடம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார் பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். இந்நிகழ்வின்போது அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)






















