Ganesh Chaturthi Pooja: சினிமா பிரபலம் முதல் அரசியல்வாதிகள் வரை பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம்!
பிள்ளையார்பட்டியில் சிகர நிகழ்ச்சியான தீர்த்த வாரி வைபவம் திருக்குளத்தில் நடந்தன, முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்தில் காட்சியளித்தார்.
![Ganesh Chaturthi Pooja: சினிமா பிரபலம் முதல் அரசியல்வாதிகள் வரை பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம்! Ganesh Chaturthi Pooja Movie celebs and politicians are visiting Sami at Pilliyarpatti Ganesh Chaturthi Pooja: சினிமா பிரபலம் முதல் அரசியல்வாதிகள் வரை பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/07/5c10c0fd6914544b5ccf95321f5b182e1725685011936184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோயில் குளத்தில் சிவாச்சாரியார் அங்குச தேவரையும் அஸ்திரதேவரையும் மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி வைபவத்தை நடத்தினர்.
விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரபல விநாயகர் கோயில்களான சிவகங்கை பிள்ளையார்பட்டி கோயில், திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயிலில்களில் காலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேங்களும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. பிரபல விநாயகர் கோயில்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களில் விநாயகருக்கு தனி சன்னதி இருப்பதால் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்று வருகிறது.
உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கோயில்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலகப் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அதிகாலையிலிருந்து குவிந்தனர். குடைவரைக் கோயிலான இக்கோயில், சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. கற்பக விநாயகா் கோயில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோயில்களுள் ஒன்றாகும். இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இந்த கோயிலில் காணப்படும் 15-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள் இக்கோயிலின் தொன்மையை பறை சாற்றுகிறது. இவ்விழா கடந்த 29ஆம் தேதி அன்று கொடியேற்றுடன் துவங்கி நடைபெற்று வந்தன. விழாவில் சிகர நிகழ்ச்சி ஆன தீர்த்த வாரிவைப்பவம் திருக்குளத்தில் நடந்தன முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்தில் காட்சியளித்தார்.
தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார்
உற்சவர் சுவாமி கொடிமரம் அருகே தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வெள்ளி பல்லக்கில் கோயிலில் இருந்து நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானின் அங்குச தேவரும், சிவனின் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோயில் எதிரே உள்ள திருகுளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு தேவர பாடல்களுடன் அங்குச தேவருக்கும், அஸ்திரதேவருக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆராதனை நடைபெற்றது. பின்னர் பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோயில் குளத்தில் சிவாச்சாரியார் அங்குச தேவரையும் அஸ்திரதேவரையும் மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி வைபவத்தை நடத்தினர். நிறைவாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.
சாமி தரிசனம் செய்த பிரபலங்கள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று தங்கள் பெயர் ராசிக்கு அர்ச்சனைகள் செய்து தரிசனம் செய்தனர். பிள்ளையார்பட்டியில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சாமி தரிசனம் மேற்கொண்டு திரும்பினார். தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் பிள்ளையார்பட்டி வந்து செல்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)