ADMK Case Verdict: இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதிமுகவிற்கும், அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை
அதிமுகவின் தலைமையை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரை நீக்கியதோடு, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாமலும் செய்தது. இதையடுத்து, இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. அது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ் தரப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரங்கள் தொடர்பான உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதித்தது.
தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி-யுமான ஓ.பி. ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில், தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள், நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.
நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
அதில், தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவிற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என்றும், தங்களுக்கு வந்த மனுக்களை விசாரிக்க தங்களுக்கு உரிமை உள்ளதா, இல்லையா என்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்
இந்த வழக்கு தொடர்பாக வாதாடிய அதிமுக தரப்பு வழக்கறிஞர், புதிய தலைமை தேர்வு செய்யப்பட்டது, கட்சி விதிகளில் திருத்தம் செய்தது உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் வாதாடினார். மேலும், தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியுள்ளவர்கள், அதிமுக உறுப்பினர்களே இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமிக்கே முழு ஆதரவும் உள்ளதாக அதிமுக வழக்கறிஞர் தெரிவித்தார். அதோடு, கட்சி தனக்கு சொந்தம் என யாரும் உரிமை கோராத நிலையில், உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க உரிமை இல்லை என்பதால் தடையை உறுதி செய்ய வேண்டும் என வாதாடினார்.
ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதம்
இதைத் தொடர்ந்து, ரவீந்திரநாத், புகழேந்தி உள்ளிட்டோர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், அதிமுக உறுப்பினர்களின் மனநிலை மாறிவிட்டதாகவும், பெரும்பாலானோர் ஓ. பன்னீர்செல்வத்திற்கே தற்போது ஆதரவாக இருப்பதாகவும் கூறினர். அதனால், இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி 12ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.
தடையை நீக்கி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்த நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, எடப்பாடி பழனிசாமி தரப்பு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். அதிமுக உட்கட்சி விவகாரத்தை மட்டுமல்லாமல், இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இவ்விவகாரத்தை விசாரிக்க உரிமை உள்ளதா, இல்லையா என்பதில் சட்டவிதிகளின்படி தேர்தல் ஆணையம் திருப்தி அடைந்தபின் விசாரிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் முடங்குமா.?
தற்போது, இந்த தீர்ப்பினால் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. தேர்தலை நோக்கி காய்களை நகர்த்திவரும் அதிமுக, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தற்போது அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பதிலேயே சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே, எடப்பாடி தலைமையிலான அணிக்கு இரட்டை இலை ஒதுக்கப்பட்ட நிலையில், அதை ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக எதிர்த்துவந்தது. இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்குகள் உள்ளன. இந்த சூழலில், தற்போது தேர்தல் ஆணையம் விசாரணையில் இறங்கினால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சின்னம் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டால், அது தேர்தலை எதிர்கொள்வதிலேயே பெரும் சிக்கலை உருவாக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் மூட்டை கட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், தற்போ எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உச்சகட்ட டென்ஷன் ஏற்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மட்டுமே மேல் முறையீடு செய்ய முடியும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளை எடப்பாடி தரப்பு உடனடியாக மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

