அக்டோபரிலேயே தேர்வு எழுதிக் கொள்கிறோம்... பசி, கவலையுடன் காத்திருந்த மாணவர்கள் எடுத்த முடிவு
பள்ளி மாணவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் ஹால் டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு ஹால் டிக்கெட் விரைவில் வந்து விடும் என பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தி உள்ளது.

தஞ்சாவூர்: அங்கீகாரம் இல்லாமல் ஏமாற்றிய பள்ளி மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு அருகில் தனியார் CBSE பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 19 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பில் CBSE பாடத்திட்டத்தில் படித்து வருகின்றனர். இன்று 15ம் தேதி CBSE பத்தாம் வகுப்பு தேர்வு துவங்க உள்ள நிலையில் நேற்று வரை இந்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி மாணவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் ஹால் டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு ஹால் டிக்கெட் விரைவில் வந்து விடும் என பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தி உள்ளது. இந்நிலையில் பள்ளியின் மீது சிலர் வழக்கு தொடர்ந்து உள்ளதால், உங்களது ஹால் டிக்கெட் முடக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தனி தேர்வாளராக தேர்வு எழுதுங்கள் என மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சிபிஎஸ்இக்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்காததால் தேர்வு எழுத முடியாது. தனி தேர்வாளராக தேர்வு எழுதலாம் என கூறியுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் முகாமை அலுவலகத்தில் இது குறித்து மனு அளிக்க வந்தனர். ஆனால் இங்கு மனுக்கள் பெற முடியாது நீங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லுங்கள் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க பெற்றோர்கள் மாணவர்களுடன் காத்துக் கிடக்கும் சூழல் உருவானது. மாவட்ட ஆட்சியர் கும்பகோணத்தில் பட்ஜெட் கருத்து கேட்புக் கூட்டத்தில் இருந்ததால் பெற்றோர்களால் சந்திக்க முடியவில்லை.
தொடர்ந்து பள்ளி தாளாளர் பைசல் அகமது தஞ்சைக்கு புறப்பட்டு வந்தார். இதையடுத்து பள்ளிதாளாளர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அந்த பள்ளிக்கு எட்டாம் வகுப்பில் இருந்தே அங்கீகாரம் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாது என்ற சூழல் உருவானது. இதனால் மாணவர்கள் NIOS திட்டத்தின் மூலம் வரும் அக்டோபர் மாதம் தேர்வு எழுதலாம் என கூறப்பட்டது. ஆனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும், எனவே ஏப்ரல் மாதமே தேர்வு எழுத வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்களும் - மாணவர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கும்பகோணத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. நாளை (இன்று) தேர்வு சிபிஎஸ்இ தேர்வு எழுத முடியாது என்பதால், மாநில பாடத்தில் அடுத்த மாதம் எழுத நடவடிக்கை எடுக்கப்படும்.
இல்லையென்றால் அக்டோபர் மாதத்தில் தான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் எழுத முடியும். எனவே பெற்றோர்களும் - மாணவர்களும் முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என கூறப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் நடத்திய ஒரு மணி நேர பேச்சுவார்த்தையில், வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் எழுதுவதாக பெற்றோர், மாணவர்கள் தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கலெக்ர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறியதாவது: மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் அக்டோபர் மாதமே தேர்வு எழுத ஒத்துக்கொண்டு உள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். பள்ளி நிர்வாகத்தின் மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர் அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

