அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?
டெல்லி தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணியே தேவையா என்று கூட்டணியில் உள்ள கட்சிகளே காங்கிரஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயார் என சொல்லி ட்விஸ்ட் கொடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.
மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. ஆனால் மாநில அளவில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளே எதிர் எதிர் துருவங்களாக நின்று போட்டி போட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியையும், காங்கிரஸையும் பின்னுக்கு தள்ளி ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லியில் 2 கட்சிகளும் கூட்டணி வைக்காததே தோல்விக்கு காரணம் என விமர்சிக்கப்படுகிறது. தேர்தலில் காங்கிரஸை ஓரங்கட்டிவிட்டு ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேர்தல் தோல்விக்கு பிறகு ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
2 கட்சியும் ஒற்றுமையாய் இல்லாததுதான் பாஜக ஆட்சியில் அமர்வதற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். ஹரியானா தேர்தலில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவி செய்யவில்லை, டெல்லி தேர்தலில் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி உதவி செய்யவில்லை, இதுதான் கூட்டணியின் நிலை என ரவுண்டுகட்டியுள்ளார். அதோடு சேர்த்து அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மேற்குவங்க சட்டசபை தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து தான் நிற்கும் என சொல்லி காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்துள்ளார். மக்களவை தேர்தல் சமயத்திலேயே தொகுதி பங்கீட்டின் போது 2 கட்சிகளும் அடித்துக் கொண்டன. அதனால் இந்த முறை ஆரம்பத்திலேயே கூட்டணியில் இருந்து பின்வாங்கும் முடிவுக்கு வந்துவிட்டார் மம்தா. இதன் பின்னணியில் காங்கிரஸ் கூட்டணிக்காக தங்களிடம் இறங்கி வர வேண்டும் என்ற மம்தாவின் ப்ளான் இருப்பதாக சொல்கின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸுடன் இந்தியா கூட்டணியினர் மோதலில் ஈடுபட்டு வருவது விமர்சனத்தில் சிக்கியது. டெல்லி தேர்தலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கே ஆதரவு தெரிவித்தார். உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிலும் இந்தியா கூட்டணி எதற்கு என கேள்வி கேட்டு கட்டுரை வெளியாகியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸே ஒருவரையொருவர் அழித்துவிட்டனர். அதனால் பாஜக எளிதாக உள்ளே நுழைந்துவிட்டது. இனியும் இப்படிதான் நடக்கும் என்றால் கூட்டணி உருவாக்கப்பட்டது” எதற்காக என விமர்சிக்கப்பட்டுள்ளது.
இப்படி கூட்டணியில் இருக்கும் கட்சிகளே காங்கிரஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் இந்த விவகாரத்தில் சைலண்ட் மோடில் இருக்கிறார். பிரச்னை இப்படியே சென்றால் இந்தியா கூட்டணியே இல்லாமல் போய்விடும் என காங்கிரஸ் கட்சியினர் புலம்பி வருகின்றனர். இந்தியா கூட்டணிக்கு தலைவரே இல்லாமல் இருப்பதுதான் கூட்டணியௌ ஒருங்கிணைக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ராகுல்காந்தி இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





















