Vinayagar Chaturthi: களைகட்டிய விநாயகர் சதுர்த்தி! காலை முதலே கோயில்களில் குவியும் பக்தர்கள் - பலத்த பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. இதனால், பக்தர்கள் கோயில்களில் குவிந்து வருகின்றனர்.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நன்னாளில் விநாயகர் அவதரித்ததாககருதப்படுகிறது. முழு முதற்கடவுளாக இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி:
இன்று விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே கோயில்களில் அதற்கான சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளும், அலங்காரங்களும் நடைபெற்று வந்தது.
கோயில்களில் குவியும் பக்தர்கள்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரபல விநாயகர் கோயில்களான காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயில், திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயிலில்களில் காலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேங்களும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.
பிரபல விநாயகர் கோயில்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களில் விநாயகருக்கு தனி சன்னதி இருப்பதால் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள பிரபல கோயில்களிலும் காலை முதலே பக்தர்கள் விநாயகரை வணங்குவதற்காக குவிந்து வருகின்றனர். பக்தர்கள் அதிகளவு குவிந்து வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு:
கோயில்கள் மட்டுமின்றி சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பக்தர்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. பதற்றமான இடங்களில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல கோயில்களில் அன்னதானமும், பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி காரணமாக பூக்கள், பழங்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.