என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
அதிமுகவில் உட்கட்சி விவகாரம் முற்றியுள்ள நிலையில் தற்போது அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையமே தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
அதிமுகவில் உட்கட்சி விவகாரம் முற்றியுள்ள நிலையில் தற்போது அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு நெருக்கடியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு புகழேந்தி கூறுகையில், “இந்த வழக்கு சூரிய மூர்த்தி தொடர்ந்த வழக்கு. நானும் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தேன். தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என டெக்னிகல் பாய்ண்ட்ஸ்ல தான் அந்த தடை கொடுக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்திற்கு எல்லா உரிமைகளும் உண்டு. தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியும் என்பதுதான் எங்கள் வாதமாக இருந்தது. மிக்க மகிழ்ச்சியான தருணமாக இதை பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீதிபதி அருமையான தீர்ப்பு வழங்கியுள்ளார். தடை நீங்கி விட்டது. இனி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். பொதுச்செயலாளர் என்ற பதவியை பயன்படுத்தக்கூடாது. கட்சி பெயரை பயன்படுத்த கூடாது. பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இனி ஊரையும், உலகத்தையும் மீடியாக்களையும் ஏமாற்ற வேண்டாம். இதைத்தான் வாதமாக வைத்தோம்.
இனி பிரச்சினை இல்லை. நாங்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி செல்வோம். தேர்தல் ஆணையம் விசாரிக்கும். எம்.ஜி.ஆருக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த இரட்டை இலையை முடக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை.
பழனிசாமி என்ற தீய சக்தியிடம் இரட்டை இலை இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். நேற்றைய தினம், எனக்கு தூக்கமே இல்லை. ஏனென்றால் அந்த தாய் உயிரிழந்தார். அதன்பின்னர் நான்கரை ஆண்டு கால ஆட்சிக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் மறைவு இல்லாமல் போயிருந்தால் பழனிசாமி முதலமைச்சராக ஆகியிருக்க முடியாது. அந்த பிச்சையும் அம்மாதான் போட்டார்கள்.
அந்த அம்மாதான் 3.72 கோடி பணத்தை அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ஒதுக்கினார்கள். அங்கு எம்.ஜி.ஆர் படம், ஜெயலலிதா படம் இல்லாமல் நிகழ்ச்சி நடக்கிறது.
அதைப்பற்றி இபிஎஸ் கவலைப்படவில்லை. சிலர் அதை ஆதரிக்கிறார்கள். இபிஎஸ்சை ஆதரிப்பவர்களுக்கு சொல்கிறேன். அவரை ஆதரித்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்தை வீட்டில் இருந்து தூக்கி வீசி விடுங்கள். உங்க வீட்டில் இருப்பவர்கள் கூட ஒப்புக்கொள்ள வேண்டும். என்னை கேட்டால் எனக்கு எதுவும் வேண்டாம். ஆட்சி வேண்டாம், பொறுப்பு வேண்டாம். ஆனால் அம்மா வேண்டும். அங்குதான் புகழேந்தி நிற்கிறேன். எதைப்பற்றியும் கவலையில்லை.
எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படவேண்டும் என்பதுதான் எனது நோக்கம். என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி. கடைசிவரை நாங்கள் பார்ப்போம்.
இந்த முறை நீதிமன்றத்தை பழனிசாமி தரப்பால் முடியவில்லை. தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அதிமுகவில் ஏற்படும் குழப்பங்களுக்கு பின்னணியிலும் தற்போது ஓபிஎஸ் தரப்பு கை ஓங்கியிருக்கும் பின்னணியிலும் பாஜக இருக்கவில்லை என்பதை நம்பமுடியவில்லை என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடிக்கு முழு உரிமையும் இருந்த நிலையில் தற்போது உயர்நீதிமன்ற உத்தரவால் அது கேள்வி குறியாகியிருக்கிறது. தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதை பொறுத்தே இது ஒற்றைத்தலைமையா இல்லை இரட்டை தலைமைக்கு மீண்டும் மாறும் வாய்ப்பு உள்ளதா என்பது தெரியவரும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

