Gold smuggling : துபாய் டூ கேரளா..! இறைச்சி இயந்திரத்தில் மறைத்து தங்கம் கடத்தல்..! பிரபல படத்தயாரிப்பாளர் கைது..!
துபாயில் இருந்து கேரளாவிற்கு இறைச்சி வெட்டும் இயந்திரத்தில் தங்கத்தை மறைத்து கடத்திய பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் கடல் வழியாகவும், ஆகாய வழியாகவும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்தின் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கொச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வந்த இறைச்சி வெட்டும் இயந்திரம் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது. இதையடுத்து, அதைப்பிரித்து பரிசோததித்தபோது அந்த இயந்திரத்தில் ரகசிய பாகம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப்பிரித்து பார்த்து பரிசோதித்தபோது அதில் 2.33 கிலோ தங்கம் மறைத்து கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கொச்சியைச் சேர்ந்த ஷாபின் என்பவர் கைது செய்யப்பட்டார். ஷாபினிடம் நடத்திய விசாரணையில் இந்த தங்க கடத்தலில் சிராஜூதினுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் மலையாள திரையுலகின் பிரபல படத்தயாரிப்பாளர் ஆவார்.
சிராஜூதினுக்கு துபாயில் சொந்தமாக லேத் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து இறைச்சி வெட்டும் இயந்திரத்தை தயாரித்து வரும் சிராஜூதின் அந்த இயந்திரங்கள் மூலமாக ரகசியமாக தங்கத்தை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, திரைப்பட தயாரிப்பாளர் சிராஜூதினை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ய முயற்சித்தபோது அவர் துபாயில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சர்வதேச போலீஸ் உதவியுடன் சிராஜூதினை கொச்சிக்கு சுங்கத்துறை அதிகாரிகள் வரவழைத்தனர். பின்னர், அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஜய்பாபு துபாயில் தலைமறைவாக இருப்பதற்கு சிராஜூதின் உதவியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையங்கள் வழியாக பயணிகள் என்ற பெயரில் தங்கம் கடத்தப்பட்டு வந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து பார்சல்களாக விமானநிலையங்களுக்கு வரும் பொருட்களில் மறைத்தும் தங்கம் கடத்தப்பட்டு வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதைத்தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி விமானநிலையங்களில் அதிகளவில் கடத்தல் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதைப்போல, கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூர் ஆகிய விமான நிலையங்களிலும் அதிகளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Sister Abhaya : கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்து, ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்..
மேலும் படிக்க : Crime : ஃபேஸ்புக் பதிவு.. அதிரவைக்கும் காரணம்.. மகனுடன் லாரியில் மோதி காப்பீட்டு நிறுவன ஊழியர் தற்கொலை..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்