Sister Abhaya : கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்து, ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்..
கடந்த 1992ஆம் ஆண்டு கேரளா கான்வெண்ட் ஒன்றில் கொலை செய்யப்பட்ட கன்னியாஸ்திரி அபயா வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாதிரியாருக்கும், கன்னியாஸ்திரிக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.
கடந்த 1992ஆம் ஆண்டு கேரளாவின் கோட்டயம் பகுதியில் உள்ள கான்வெண்ட் ஒன்றில் கொலை செய்யப்பட்ட 21 வயதான கன்னியாஸ்திரி அபயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாதிரியாருக்கும், மற்றொரு கன்னியாஸ்திரிக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.
பாதிரியார் தாமஸ் கொட்டூர், கன்னியாஸ்திரி செஃபி ஆகியோர் மீது விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, இருவரும் ஜாமீனுக்காக 5 லட்சம் ரூபாய் தொகை செலுத்த வேண்டும் எனவும் கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினோத் சந்திரன், ஜெயசந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு.
இந்தக் கொலை வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்ததையும், ஆயுள் தண்டனை விதித்திருந்ததையும் எதிர்த்து ஜாமீன் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் முதலில் காவல்துறை விசாரணை நடைபெற்று, அதன் பிறகு குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து இந்த வழக்கைத் தற்கொலை எனக் கூறியிருந்தனர். கடந்த 2008ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது சிபிஐ. கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26 அன்று இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டு, பல்வேறு சாட்சிகளும் பிறழ்சாட்சியாகினர்.
குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு இடையில் நிகழ்ந்த தகாத சம்பவத்தை 21 வயது கன்னியாஸ்திரி அபயா பார்த்துவிட்டதால் அவர் கோடரியின் கைப்பிடியால் தாக்கிக் கொல்லப்பட்டார் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு, மார்ச் 27 அன்று, கேரளாவின் கோட்டயம் பகுதியில் அமைந்துள்ள புனித பயஸ் கான்வெண்டின் கிணற்றில் கன்னியாஸ்திரி அபயாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கோட்டயத்தில் உள்ள பிசிஎம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவியான அபயா கான்வெண்டில் தங்கி வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவருக்கும், மற்றொரு பாதிரியாரான ஜோஸ் புத்ரிக்கயில் ஆகியோருக்கும் இடையிலான தகாத உறவை அபயா கண்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவரை மூவரும் கோடரியால் தாக்கி, கொலை செய்து, கிணற்றில் தூக்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொரு பாதிரியாரான ஜோஸ் புத்ரிக்கயில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்