Karun Nair: காலை வாரிய கருண் நாயர்.. இதுக்கு மேல சான்ஸ் வேணுமா? இந்த பிட்ச்ல கூட அடிக்கலனா எப்படி?
கருண் நாயர் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகிய நிலையில் அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையிலும், ரஹானே, புஜாரா தற்போது ஓரங்கட்டப்பட்டு வரும் சூழலில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சொதப்பும் கருண் நாயர்:
இந்திய அணியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கருண் நாயர் முதல் இன்னிங்சிலே டக் அவுட்டானார். அடுத்த இன்னிங்சிலும் 20 ரன்களுக்கு அவுட்டானார்.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பேட்டிங்கிற்கு மிகுந்த சாதகமாக இருந்த நிலையில் கருண் நாயர் முதல் இன்னிங்சில் 31 ரன்களுக்கு அவுட்டானார். எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வெற்றி பெற அற்புதமான வாய்ப்பு கிட்டியுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ப்ரைடன் கார்ஸ் பந்தில் 26 ரன்களுக்கு அவுட்டானார் கருண் நாயர்.
4 இன்னிங்சில் 77 ரன்கள்:
கருண் நாயருக்கு ஆதரவாக குரல்கள் சமூக வலைதளங்களில் வலுவாக எழுந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் பின்வரிசையில் இறக்கப்பட்ட கருண் நாயர் இந்த போட்டியில் ஒன் டவுன் வீரராக இறக்கப்பட்டார். ஆனால், இந்த போட்டியில் ஒன் டவுன் வீரராக இறக்கப்பட்டும், 2 இன்னிங்சிலும் சேர்த்து 57 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 4 இன்னிங்சிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிட்டியும் 77 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் ஒரு டக் அவுட் அடங்கும்.

ரசிகர்கள் கோபம்:
இந்திய டெஸ்ட் அணியில் ஒன் டவுன் என்பது மிக மிக முக்கியமான இடம் ஆகும். ராகுல் டிராவிட், புஜாரா என பல ஜாம்பவான் வீரர்கள் ஆடிய இடம் ஆகும். 33 வயதான கருண் நாயர் மீது நம்பிக்கை வைத்து அணியில் எடுத்த நிலையில், அவர் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவரை பலரும் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அன்பான கிரிக்கெட் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தா என்று அவர் 2022ம் ஆண்டு உருக்கமாக பதிவிட்டதை சுட்டிக்காட்டி, இனிமேல் வாய்பபு கொடுக்காதே என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை மிகவும் சவாலான பந்துவீச்சை அவர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வீசவில்லை.
இந்த மைதானத்தில் இப்படியா?
பேட்டிங்கிற்கு மிக மிக சாதகமான ஆடுகளத்தில்கூட கிடைத்த வாய்ப்பை தவறவிடுவதால், அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஏனென்றால், ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக ஆடிய அபிமன்யு ஈஸ்வரன் தொடர்ந்து பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டு வருகிறார்.

முச்சதத்திற்கு பிறகு கருண் நாயர் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் 26 ரன்கள், 0 ரன், 23 ரன்கள், 5 ரன்கள் ஆகியவை மட்டுமே எடுத்துள்ளார். 2017ம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு அணியில் வழங்கப்பட்ட வாய்ப்பையும் தற்போது வீணடித்துள்ளார். இவர் கடைசியாக ஆடி 11 இன்னிங்சில் முச்சதம் விளாசிய இன்னிங்ஸ் தவிர எஞ்சிய 10 இன்னிங்சில் வெறும் 148 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.




















