Abishan Jeevinth : டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்.. ஹீரோயின் யார் தெரியுமா?
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் கவனத்தை பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அபிஷன் ஜீவிந்த். இவர் இயக்கிய முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 50 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக சென்ஷேனல் ஹீரோயின் கமிட் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
குறைந்த பட்ஜெட் மிகப்பெரிய வெற்றி
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் வெளியான பாடல்களும், காமெடி காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக மம்பட்டியான் படத்தில் இடம்பெற்ற பாடலும் ரசிக்கும்படியே இருந்தன. நடிகர்களின் தேர்வும் பாராட்டை பெற்றது. இப்படத்தில் இயக்குநர் அபிஷன் சிறு கதாப்பாத்திரத்தில் வந்து பாராட்டை பெற்றார்.
ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்
திருச்சியை பூர்விகமாக கொண்ட அபிஷன் ஜீவிந்த், இதுவரை யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கிடையாது. முதல் படத்திலேயே செஞ்சூரி அடித்து விட்டார். இவர் இயக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்திற்கு Corrected Machi என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இணை இயக்குநர் இயக்க இருக்கிறார். ஹீரோயின் யார் என்பது தான் மேலும் ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது.
மலையாள சென்ஷேனல் ஹீரோயின்
அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்கும் படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க இருக்கிறாராம். இவர் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி 2வது பாகத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் நெரு, Rekhachithram, Guruvayoor Ambalanadayil போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சென்ஷேனல் ஹீரோயினாகவும் வலம் வருகிறார். தற்போது தமிழ் படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். மேலும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதீப் வழியில் அபிஷன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே, டிராகன் போன்ற படங்களின் வெற்றியால் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். பார்ப்பதற்கு தனுஷ் போன்ற உடலமைப்புடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரை தொடர்ந்து தற்போது அபிஷன் ஜீவிந்தும் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். பிரதீப் ரங்கநாதனுக்கு லவ் டுடே படத்தை போன்று, Corrected Machi படங்களில் அபிஷன் நடிக்க இருக்கிறார். இப்படமும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















