ரோலக்சையே மிஞ்சுமா தாஹா? பவர்ஃபுல் வில்லன் யார்? லோகேஷ் பவர் கொடுக்கப்போவது யாருக்கு?
சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை காட்டிலும் அமீர்கானின் தாஹா கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகத்தின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ள இவரது இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
கூலியில் அமீர்கான்:
இந்த படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா. செளபின் தாஹிர் என நட்சத்திர பட்டாளங்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அமீர்கான் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகிய நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
ரோலக்சை மிஞ்சும் தாஹா?
அதில், அமீர்கான் தாஹா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோரின் கதாபாத்திரங்களை காட்டிலும் இந்த தாஹா கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பிடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை காட்டிலும் இந்த கதாபாத்திரத்தை மிகவும் பலமிகுந்ததாக லோகேஷ் கனகராஜ் கட்டமைத்திருப்பதாக கூறப்படுகிறது. வாயில் பைப் சிகரெட்டுடன் அமீர்கான் நிற்கும் போஸ் ஏற்கனவே வெளியாகி இணையத்தை அதிரவைத்துள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என பல பிரபலங்கள் இருந்தாலும் கடைசியில் 5 நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் ரோலக்ஸ் கதாபாத்திரமே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அந்த கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா தனது நடிப்பால் மிரட்டியிருப்பார். அதுபோல, கூலி படத்திலும் அமீர்கானின் கதாபாத்திரம் அமையும் என்று கோலிவுட் தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரோலக்ஸ் கதாபாத்திரம் சூர்யாவின் திரைவாழ்வில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்திருப்பதுடன், முழுவீச்சில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து திரைப்படம் ஒன்றும் தயாராக உள்ளது. இதனால், தாஹா கதாபாத்திரமும் அதுபோல வரவேற்பு பெற்றால் அதன் பின்னணியில் திரைப்படம் உருவாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டம்:
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர். படப்பிடிப்பு நிறைவடைந்து சுதந்திர தின கொண்டாட்டமாக வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், ட்ரெயிலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் முழுவீச்சில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் பாலிவுட் உச்சநட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ராஜேஷ் கண்ணா, ஷாருக்கான், கோவிந்தா, ஜிதேந்திரா, சன்னி தியோல் என பல பிரபலங்களுடன் இந்தியில் இணைந்து நடித்து விட்டார். அமீர்கானுடன் இணைந்து 1995ம் ஆண்டு ஆதங்க் ஹி ஆடங்க் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன்பின்பு, 20 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.





















