Supreme Court : "சட்டத்துக்கு விரோதமாக கட்டடங்கள் இடிக்கப்படவில்லை” : உச்சநீதிமன்றத்தில் பதில் கொடுத்த உ.பி அரசு..
உத்தரப்பிரதேச நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1972 இன்படி இது செய்யப்பட்டதாகவும். கலவர சம்பவங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசு மறுத்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் அலகாபாத்தில் அண்மையில் இடிக்கப்பட்ட கட்டடங்கள் சட்டத்துக்கு உட்பட்டு செய்யப்பட்டதாக அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கான்பூர் மற்றும் அலகாப்பாத்தில் உள்ள சில தனியார் சொத்துக்கள், சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல், சமீபத்தில் இடிக்கப்பட்டது என்ற கூற்றை மறுத்துள்ள உத்தரபிரதேச அரசு, அவை கான்பூர் மேம்பாட்டு ஆணையம் மற்றும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1972 இன்படி இது செய்யப்பட்டதாகவும். கலவர சம்பவங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசு மறுத்துள்ளது.
இடிபாடுகளுக்கு எதிராக முஸ்லிம் அமைப்பான ஜமியத் உலமா-இ-ஹிந்த் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த உத்திரப் பிரதேச அரசு, “மனுதாரர் உள்ளூர் மேம்பாட்டு அதிகாரிகளால் எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு தவறான வண்ணம் கொடுக்க முயல்கிறார். ஒருதலைப்பட்சமான ஊடகங்கள் ஒரு சில சம்பவங்களை அறிக்கையிடுவது மற்றும் மாநிலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை வெளிக்கொணர்ந்தது. அதையே மனுதராரும் சமர்ப்பித்துள்ளனர். இது முற்றிலும் தவறானது மற்றும் தவறாக வழிநடத்துகிறது" என்றுள்ளது.
மேலும் மனுவில் சொல்லப்பட்ட இடிப்புகள் சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்புகளான உள்ளூர் மேம்பாட்டு அதிகாரிகளால் சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகர்புறத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்படாத/சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான அவர்களின் வழக்கமான நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இது என்றும் கான்பூரில் நடந்த இரண்டு இடிப்புகளின் போது, கட்டுமானத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கட்டுமானங்களில் விதிமீறல்களை பில்டர்களே ஒப்புக்கொண்டதாகவும் அரசு கூறியது.
இந்த இடிப்பு நடவடிக்கை கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குறிவைப்பதற்காகவே என்ற அதன் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த, மாநில அதிகாரிகளின் சில அறிக்கைகளை ஜமியத் குறிப்பிட்டது. இதை எதிர்த்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த அரசு, “எந்தவொரு குறிப்பிட்ட மத சமூகத்தையும் குறிவைத்து இது நிகழவில்லை . இது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான மனுதாரரின் முயற்சி. அத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை மற்றும் அவை அத்தனையும் கடுமையாக மறுக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளது.
உத்திரப் பிரதேச அரசு, "மனுதாரரால் அடிப்படையின்றி கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் மற்றும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றும் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது. கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுச் சொத்து சேதம் தடுப்புச் சட்டம் ,1986 மற்றும் உத்தரப் பிரதேசம் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் சட்டம், 2020 ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்துள்ளது.