Tesla Model Y: பெயிண்டுக்கே புல்லட் விலை, முழு செல்ஃப் ட்ரைவிங்கிற்கு தனி கார் விலை - டெஸ்லா மாடல் Y தேறுமா?
Tesla Model Y: டெஸ்லா நிறுவனத்தின் மாடல் Y காரை பிரத்யேக வண்ணத்தில் பெற, ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக் விலைக்கு இணையான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளது.

Tesla Model Y: டெஸ்லா நிறுவனத்தின் மாடல் Y காரில் முழு செல்ஃப் ட்ரைவிங் அம்சத்தை பெற, வேகன் ஆர் கார் மாடலின் விலைக்கு நிகரான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளது.
இந்தியாவில் டெஸ்லா கார் அறிமுகம்:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் தனது முதல் ஷோ ரூமை, டெஸ்லா நிறுவனம் மும்பையில் திறந்துள்ளது. அதில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள மாடல் Y காரின் தொடக்க விலை, 59 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், உங்களுக்கான காரை நீங்கள் கஸ்டமைஸ் செய்யும்போது, கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக பிரத்யேக வண்ணம் மற்றும் செல்ஃப் ட்ரைவிங் ஆப்ஷன்களை பெற, கார் மற்றும் பைக்கின் விலைக்கு நிகரான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது இந்திய பயனர்களிடையே ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா மாடல் Y காரின் பெயிண்ட் விலை:
மாடல் Y கார் மாடலானது 6 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதில் ஸ்டெல்த் கிரே நிறத்திற்கு கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், மற்ற நிறங்களை தேர்வு செய்தால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். உதாரணமாக பியர்ல் ஒயிட் மல்டி -கோட் நிறத்திற்கு கூடுதலாக 95 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக குயிக் சில்வர் மற்றும் அல்ட்ரா ரெட் வண்ணங்களுக்கு கூடுதலாக ரூ.1.85 லட்சம் செலுத்த வேண்டும். இது இந்திய சந்தையில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய புல்லட் மோட்டார் சைக்கிளின் விலையை காட்டிலும் அதிகமாகும்.
| வண்ண விருப்பங்கள் | விலை |
| ஸ்டெல்த் க்ரே | - |
| பியர்ல் ஒயிட் மல்டி - கோட் | ரூ.95,000 |
| டையமண்ட் பிளாக் | ரூ.95,000 |
| கிளாசியர் ப்ளூ | ரூ.1,25,000 |
| குயிக் சில்வர் | ரூ.1,85,000 |
| அல்ட்ரா ரெட் | ரூ.1,85,000 |
டெஸ்லா மாடல் Y காரின் இண்டீரியர் கலர் விலை:
எளிமையின் மூலம் காண்போரின் கவனத்தை மாடல் Y கார் கவர்ந்துள்ளது. பயனர்கள் பிளாக் மற்றும் பிளாக் & ஒயிட் ஆப்ஷன்களில் ஒன்றை இண்டீரியருக்கான நிறமாக தேர்வு செய்யலாம். அதில் பிளாக் ஆப்ஷனுக்கு கூடுதலாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. அதேநேரம், பிளாக் & ஒயிட் ஆப்ஷனுக்கு பயனர்கள் கூடுதலாக 95 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், இந்த ஆப்ஷன் பராமரிப்பு செலவை அதிகரிக்கும் என்பதால், பயனர்கள் பிளாக் ஆப்ஷனை தேர்வு செய்வதே நல்ல முடிவாக இருக்கும். அதன் மூலம், அநாவசிய செலவான ரூ.95 ஆயிரத்தையும் சேமிக்கலாம்.
டெஸ்லா மாடல் Y கார் - செல்ஃப் ட்ரைவிங் பேக் விலை
டெஸ்லா கார் மாடலின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பில் பாதி, அதன் செல்ஃப் ட்ரைவிங் அம்சத்தின் காரணமாக உருவானதாகும். ஆனால், அந்த அம்சத்தை முழுமையாக தங்களது டெஸ்லா காரில் இணைக்க பயனர்கள் கூடுதலாக 6 லட்ச ரூபாயை செலவிட வேண்டியுள்ளது. அதாவது இந்த அம்சத்திற்கான கூடுதல் கட்டணமானது, புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் மாடலின் விலையை காட்டிலும் அதிகமாகும்.
டெஸ்லா மாடல் விலை விவரங்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டெஸ்லாவின் மாடல் Y காரானது, ரியர் வீல் ட்ரைவ் மற்றும் ரியர் வீல் ட்ரைவ் லாங்க் ரேஞ்ச் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதில் முதல் வேரியண்டின் விலை ரூ.59.89 லட்சம் மற்றும் இரண்டாவது வேரியண்டின் விலை ரூ.67.89 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 60KWh மற்றும் 75KWh பேட்டரி பேக்குகளை முழுமையாக சார்ஜ் செய்தால், அவை முறையே 500 மற்றும் 622 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடுத்த மக்கள் நிறைந்த இந்திய சந்தையில் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு காரை வாங்குபவர்களே அதிகம். அப்படி இருக்கையில் ஒவ்வொரு அம்சத்திற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டெஸ்லா காரின் செயல்பாடு உள்நாட்டில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.





















